Sunday, November 13, 2005

நான் புறக்கணிக்க மாட்டேன்

//நடிகை சுகாசினி மணிரத்தினம், நடிகை குஸ்பு ஆகியோரது திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ்த் திரைப்பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.//

திடீரென ஒரு அறிக்கை யார் இவர்கள்?

யார் தலைவர் யார் செயலாளர்? சும்மா அறிக்கை விட்டால் போதுமா?

சுகாசினி படத்தை பகிஸ்கரிப்போம் என்பதை விட்டு தில்லு இருந்தால் நெய்வேலி போராட்டத்தை மழுங்கச்செய்த ரஜனியின் அடுத்த சிவாஜி படத்தை திரையிடாமல் செய்யுங்கள்.அதை விட்டு செத்த பாம்பு அடிக்காதீர்கள்.




கீழே அறிக்கை
http://www.puthinam.com


சுகாசினி மணிரத்னம் திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க முடிவு!!
[திங்கட்கிழமை, 14 நவம்பர் 2005, 04:39 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

தமிழர் பண்பாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக கருத்துகளைக் கூறி வரும் நடிகை சுகாசினி மணிரத்தினம், நடிகை குஸ்பு ஆகியோரது திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ்த் திரைப்பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஐரோப்பிய வட-அமெரிக்க தமிழ்த் திரை ரசிகர்கள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்ப் பெண்களின் கற்புப் பற்றி தவறாக கருத்துக் கூறிய நடிகை குஸ்புவிற்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குஸ்புவிற்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிமன்றிற்குச் சமூகமளிக்கத் தவறியதற்காக நீதிமன்றங்கள் குஸ்புவிற்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் குஸ்பு தெரிவித்த கருத்துத் தவறானது என தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழர்கள் பற்றிய இழிவான கருத்தொன்றை தமிழரல்லாத சுகாசினி மணிரத்தினம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்வதற்கு முன்பே கற்பிழந்து போகிறார்கள் என்று குஸ்பு சொன்ன கருத்தைப் பற்றி எதுவுமே தெரிவிக்காத சுகாசினி, குஸ்புவைக் கண்டிப்பதற்குத் தமிழர்களுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறாதா? என்று தமிழர்களை மிகவும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
குஸ்புவைக் கண்டித்ததற்காக தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் என்றும் தன்னிடம் தமிழர்கள் இப்படிக் கேட்டிருந்தால் அவர்களைத் தான் கிழித்திருப்பேன் என்றும் சுகாசினி கூறியுள்ளார்.
இதற்கான கண்டனங்கள் சுகாசினியை நோக்கி தமிழகமெங்கும் எழும்ப ஆரம்பித்துள்ளது. சுகாசினி உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கமும் இதனைக் கண்டித்துள்ளது. தன் மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால் நடப்பதே வேறு என தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை சுகாசினி மிரட்டியுள்ளார்.
தமிழர்களை அடிமைகளாக நினைக்கும் மனப்பாண்மையில் காட்டுமிராண்டித் தனத்தோடு நடந்து கொண்டிருக்கும் சுகாசினி மணிரத்தினத்திற்கு எதிராக தமிழறிஞர்கள் மற்றும் தமிழக ஊடக உலகம் என்பனவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
திரை உலகிலும் சுகாசினிக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மூத்த நடிகையான மனோராமா,"முதல்வர் ஜெயலலிதாவே கண்டனம் தெரிவித்த ஒருவிடயத்தில் சுகாசினி இவ்வாறு நடந்து கொண்டது தவறு" எனத் தெரிவித்துள்ளார். வேறு பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் இதனை முற்றாகக் கண்டித்துள்ளனர்.
ஆறரைக் கோடி தமிழகத் தமிழர்களையும் அவமதிக்கும் விதமாக தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என கேள்வியெழுப்பியுள்ள சுகாசினிக்கு எதிராகத் தமிழகத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஆதரவுக் கரம் கொடுக்கிறோம்.
முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் கண்டித்த குஸ்புவின் கருத்துப் பரிமாற்றத்தை நியாயப்படுத்துவதற்காக, தமிழர்களிற்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என தமிழரல்லாத மனப்பான்மையுடன் பேசியுள்ள சுகாசினி, தமிழகத் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு அமைய, அனைத்துத் தமிழர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும்,
இல்லாவிட்டால் இனிவரும் காலங்களில் மணிரத்தினத்தினதோ அல்லது சுகாசினியினதோ, திரைப்படங்கள் ஐரோப்பாக் கண்டம், அவுஸ்திரேலியாக் கண்டம், அமெரிக்கக் கண்டம், மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் திரையிட முடியாதபடி போராடுவோம்.
இது குறித்து மேற்குலக நாடுகளில் திரைப்பட விநியோகங்களில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைத் திரட்டும் முதற்கட்ட நடவடிக்கையை இப்போது மேற்கொண்டு வருகிறோம். இதற்கு தாங்களும் பரிபூரண ஆதரவு தருவதாக இதுவரை நாம் தொடர்பு கொண்ட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத் திரை அரங்கங்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்படுவதால் மட்டுமே தமிழ்த் திரை உலகத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டிவிடுவதில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் ஆதரவினால்தான் தமிழகத் திரை உலகம் கோடிகளில் புரள்கிறது என்ற உண்மையை தமிழ்த் திரையுலகினர் நன்கறிந்தவர்கள்.
ஏனவே, தமிழ்த் திரை உலகை நம்பிப் பிழைப்பவர்கள் தொடர்ந்தும் தமிழர்களது பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழர்களை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளைத் தெரிவிப்பது உண்ட வீட்டுக்கு இண்டகம் செய்கிற பச்சைத் துரோகமாகும். இது தொடர இனியும் அனுமதிக்க முடியாது.
இதுவரை காலம் இந்தத் துரோகச் செயல்களை சகித்துக் கொண்ட தாய்த் தமிழகத் தமிழர்கள் இப்போது வீதிகளில் துடைப்பங்களோடும், செருப்புகளோடும், தீப்பந்தங்களோடும் இறங்கி வந்துள்ளனர். தமிழர்களின் தன்மான உணர்ச்சியை நாம் வரவேற்கிறோம்.
இப் பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணர்ந்து மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காதவரை, இத்தகைய கருத்துக் கூறுவோர், தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயரிட மறுப்போர் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு வந்தாலோ, தமிழகத்தின் எதிர்ப்பையொத்த எதிர்ப்புக்கு இங்கேயும் முகம் கொடுக்க நேரிடும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

கொழுவி said...

இந்தப் புறக்கணிப்பால பெரிசா எதுவும் நடந்திடாது. முதலில குஸ்புவோ சுகாசினியோ இப்போது முதன்மை வேடங்களில் நடிப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் இப்படி புறக்கணிக்கக்கூடிய அளவுக்கு எங்கட புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட்டால் மகிழ்ச்சிதான். நல்ல, ஆக்கபூர்வமான கோரிக்கைகளோடு இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினால் நன்று.
எனக்கென்னவோ நீங்கள் சொன்னது போல செத்த பாம்புக் கதைதான் நடப்பதாகப் படுகிறது. இவற்றைவிட புறக்கணிக்க வேண்டிய படங்கள் நிறையவே இருக்கு. அதில தங்கட பலத்தையோ வீரத்தையோ காட்ட வக்கில்லாதவர்கள்தான் இவர்கள். அந்த நேரங்களில லாபம் கருதி பேசாமல் இருந்துவிடுவார்கள்.

எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது.
1999 இல் யாழ்பாணத்தில (இராணுவ ஆக்கிரமிப்பின் பின்) லெப்.கேணல். தூயவன் நிர்வாக சேவைப் பொறுப்பாளராயிருந்தபோது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சகல அரசதிணைக்கள செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டுமென்று சொல்லி அது நடைமுறைப்படுத்தப்பட்டது. புலிகளின் நிர்வாகம் தான் யாழ்ப்பாணத்தில் நடப்பதாகக்காட்ட குறிப்பிட்ட காலத்துக்கு இது நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட நாட்களில் யாழ் நகரம் வெறிச்சோடிப் போயிருக்கும்.

இதை முறியடிப்பதாகச் சொல்லிக் கொண்ட இ.பி.டி.பி ஒன்று செய்தது. புலிகளின் பகிஸ்கரிப்பு நாளன்று தாங்களும் அந்த பகிஸ்கரிப்பை எதிர்த்து ஹர்த்தாலை அறிவித்தனர். மக்களை ஹர்த்தாலில் பங்குகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். அதேநாளில் ஏற்கெனவே புலிகளின் பகிஸ்கரிப்பு நடைமுறையிலிருந்தது. பின் அந்த நாள் முடிந்ததும் புலிகளின் அடாவடியை எதிர்த்து யாழ்மக்கள் பூரண ஹர்த்தாலைக் கடைப்பிடித்தனர் என அறிவித்துப் பெருமைப்பட்டுக்கொண்டது.

ஜெ. ராம்கி said...

:-)

Anonymous said...

//புலிகளின் பகிஸ்கரிப்பு நாளன்று தாங்களும் அந்த பகிஸ்கரிப்பை எதிர்த்து ஹர்த்தாலை அறிவித்தனர்.//

கொழுவி இன்னொரு சம்பவம்
ஒருமுறை 83 ஆக இருக்கலாம் .

ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் ஒருமுறை ஒரு நாள் ஹர்த்தால் அறிவித்தார்.அப்போது அவர் எதிர்க்கட்சியில்.

ஹர்த்தால் முழுவெற்றியடைந்து கலைஞர்(DMK) திமுக புகழ்பெறலாம் என எண்ணி தனது சாணக்கியத்தால் MGR அதை முறியடித்தார். கலைஞர் குறிப்பிட்ட நாளையும் உள்ளடக்கி மூன்று நாட்கள் ஹர்த்தால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

ரஜினி ராம்கி,

உங்கள் புன்னகை எதற்கு? ரஜனி படத்தை எதிர் என்று சொன்னதற்காகவா? இல்லை சுகாசினி பட தடைக்காகவா?

பின்னூட்டத்திற்கு நன்றி

Anonymous said...

எனது ஆதரவு குஸ்பு மற்றும் சுகாசினிக்கு உண்டு! நான் இதைப்பற்றி கலந்துரையாடியவர்களும் குஸ்பு மற்றும் சுகாசினிக்கு ஆதரவாகத்தான் கதைத்தார்கள்.
இந்த கருத்தில அப்பிடி என்ன கலாச்சாரம் தங்கியுள்ளதோ தெரியவில்லை!

Anonymous said...

சுகாசினிக்கு எதிராகத் தமிழகத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஆதரவுக் கரம் கொடுக்கிறோம்.


evanukku venum

Anonymous said...

பின்னூட்டமிட்ட மறுதலைகளுக்கும்(Anonymous)
நன்றி

இந்த அறிக்கையின் திறத்தில் இந்த அறிக்கையை வேறு நச்சென்று இருக்கும் தமிழ் முரசு வேறு மறு பிரசுரம் செய்துள்ளார்கள்.

ஈழத்தில் எத்தனையோ எழுச்சி நிகழ்வுகள் கனடா கண்டிராத பொங்குதமிழ் ஆர்ப்பாட்டங்கள் யாவையுமே தமிழக பத்திரிகைகள் கண்டு கொள்வதில்லை அல்லது
மாற்றான் தாய் மனப்பாங்காக ஒதுக்கி விடுகின்றன. ஆனால் இந்த செல்லாக் காசு விடயத்தை மட்டும் தமிழ் முரசு தூக்கிப் பிடித்து பிரசுரித்துள்ளது.



http://www.tamilmurasu.in/2005/nov/15/4.pdf



-theevu-