Thursday, September 28, 2006

சண்முகநாதன் சொல்லவேயில்லையா?

முதல்வர் கருணாநிதி கூறியதாவது :-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

என்னதான் நடந்தது? தினக்குரலில் விலாவாரியாக வந்திருக்கிறது.. விபரம் இதோ..


தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு விவகாரம்- `கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது'

[28 - September - 2006] [Font Size - A - A - A]

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜூலை முதல் வாரத்திலிருந்து முயற்சி

கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

கலைஞரின் வீட்டில் கடிதம் கையளிப்பு

சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நியமனம் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார்.

கலைஞரின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு

செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பழ.நெடுமாறன் கருத்து

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். இத் தூதுக்குழுவினரை இந்தியப்பிரதமர் சந்திக்க மறுத்தமைக்கும் கருணாநிதி அவர்களைச் சந்திக்க முதலில் மறுத்ததே காரணமாக இருக்கக் கூடும். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தரான சுப.வீரபாண்டியனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, `கலைஞர் கருணாநிதி தெரிவித்த கருத்தையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸுடன் நான் தொடர்பு கொண்டு நிலைவரங்களைத் தெரிவித்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ராமதாஸ் என்னைக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரை அவர்களுடன் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கு ராமதாஸ் தயாராயிருக்கிறார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் இயங்கை சென்றுவிட்டதாகவும் ஒரேயொருவர் மாத்திரம் (சிவாஜிலிங்கம்) சென்னையில் நிற்பதாகவும் கொளத்தூர் மணி மூலம் அறிந்தேன். அத்தகவலை டாக்டர் ராமதாஸுக்கு தெரிவித்த போது, சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு என்னை அவர் கேட்டார் சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்.

7 comments:

வன்னியன் said...

சால்ஜாப்.

வலிமை தேவை. இப்ப எங்கட காலமில்லை. சந்தேகமமேயில்லாமல் நாங்கள் அரசியலில பலவீனப்பட்டிருக்கிற காலம். உப்பிடி கன 'சால்ஜாப்' காரர்களை எதிர்கொள்வதோடு அவர்களை அனுசரித்தும் போக வேண்டுமாம்.

பாதிக்கப்பட்டவர்கள் எதிர்த்துப் பேசமாட்டார்கள் என்ற ஆணவத்தோடே கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வன்னியன் said...

இந்த விவகாரத்தில் முக்கியமானவர் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள்.
தமிழில் வலைப்பதிவு வைத்திருப்பவர். நடந்தவற்றை வெளிப்படையாக எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் தமிழகத் தலைமைக்குக் கோபம் வரப் பண்ணக்கூடாது என்ற ரீதியில்தான் தற்போது எல்லோரும் அடங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை வெளிவர வேண்டும்.

"பூனைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குச் சீவன் போகுது"

Anonymous said...

தமிழகத்தின் ஆளுங்கட்சி இன்று கூட்டணி தர்மத்துக்காக, ஈழப் பிரச்சினையினின்றும், ஈழ மக்களிடமிருந்தும் விலகி நிற்கிறது என்பது வருத்தம் கலந்த உண்மை.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைகோ மூலம் பாரத பிரதமரை சந்திக்க முயற்சி செய்ததும் கருணாநிதிக்கு ஆத்திரமூட்டியிருக்கலாம்.

ஈழநாதன்(Eelanathan) said...

கூட்டணி பற்றிய பயம் மாதிரி இது தெரியவில்லை.தி.மு.கவை நம்பி காங்கிரஸ் இருக்கிறதே ஒழிய காங்கிரசை நம்பி தி.மு.க இருப்பதாகத் தெரியவில்லை.இது வசந்தன் சொன்ன பூனைக்கு(அரசியல்)விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகுது எண்ட கதைதான்.அன்பே ஆருயிரே(உடன்பிறப்பே) பாட்டு கலைஞருக்கு மறந்துவிட்டது போலும்

G.Ragavan said...

படிக்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது. சீச்சீ இவர்களெல்லாம் அரசியல்வாதிகளா! பேச்சில் வெல்லம். உள்ளத்தில் கள்ளமா! ஜெயலலிதாவிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. எப்படியும் போகட்டும். இனி கருணாநிதியிடமும் அப்படித்தான் போலும். தன்னைப் பெரியவனாகக் காட்டிக் கொள்ளும் முயற்சிகளே இவையெல்லாம்.

வன்னியன் சொன்னது போல பூனைக்கு விளையாட்டு...உயிர் போவது எலிக்குதானே....

Anonymous said...

வயது போகப்போக இப்படித்தான் வாக்கு மாறும். கருணாநிதியின் அண்மைக்காலப் பேச்சுக்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

theevu said...

நன்றி வன்னியன் ஈழநாதன் ராகவன் அநானி

கலைஞர் ஏதோ சால்ஜாப் அரசியல் செய்கிறார் என்பதுமட்டும் புரிகிறது.ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் கல்வி வசதி செய்துகொடுத்த புண்ணியவான் என்பதால்பெரிதாக விமர்சிக்கமுடியவில்லை.

எம்ஜிஆரிடம் காசு வாங்கி புலிகள் தன்னிடம் காசு வாங்க மறுத்த பழைய கறள் ஏதாவது இருக்கலாம்.பனிப் பகை..அதைவிட வைகோவின் பலம் காட்டல் முயற்சி..எல்லாம் சேர்ந்து அரசியலாக விளையாடுகிறது.

பகடைக்காய் வழமைபோல நாங்கள்தான்..அது எந்த நாடாக இருந்தாலென்ன..