Thursday, June 12, 2008

தசாவதாரம் -குமுதம் விமர்சனம்!

10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்,
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,
மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,
ஜப்பானிய கராத்தே மாஸ்டர்,
பஞ்சாபி கஜல் பாடகன்,
நியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்,
கத்தி, துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்,
எட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்,
நவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்,
இழுத்து, இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி

- என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.

கோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம், ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய், என்று, சோழ மன்னன் எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட, ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ? என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர, நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும், கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்... காட்சியமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.

வைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.

தமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் - அட்வென்சர் - சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்!

பத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.

அக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும், துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்!

முகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை, சாமர்த்தியம்.

கமல்கள் ஒன்றாக வரும் இடங்கள், சுனாமி, அதிவேக கார் துரத்தல்கள், சோழர்கால காட்சிகள், அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.

தரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.

- குமுதம் விமர்சன குழு -
முதல் காப்பிபேஸ்ட் தினமலர்
இரண்டாவது தீவு

லேபிள்:- தசாவ தரம்

7 comments:

Anonymous said...

உலக நாயகன் கமல் வாழ்க

கமல் ரசிகன்

rapp said...

என்னங்க மோகன் கந்தசாமி ஒரு கதை சொன்னார். நீங்க இட்லிவடை எல்லாம் இன்னொரு கதை சொல்றீங்க. படத்தை பார்த்தாத்தான் உறுதியா முடிவு பண்ண முடியும் போல்ரக்கு.

manjoorraja said...

இங்கிருந்து நானும் சுட்டு முத்தமிழ் கூகிள் குழுமத்தில் போட்டிருக்கேன்.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இதுதான் கதையா.நன்றி.

theevu said...

//rapp said...
என்னங்க மோகன் கந்தசாமி ஒரு கதை சொன்னார். நீங்க இட்லிவடை எல்லாம் இன்னொரு கதை சொல்றீங்க//

கதைன்னு வந்துட்டால் விட்டுடுவாங்களா?சும்மா பிளந்து கட்டிடமாட்டாங்க.:-)


//மஞ்சூர் ராசா said...
இங்கிருந்து நானும் சுட்டு முத்தமிழ் கூகிள் குழுமத்தில் போட்டிருக்கேன்.//

அப்போ மூணாவது சூடு :-)


//வல்லிசிம்ஹன் said...
நன்றி.//
_/\_

Anonymous said...

The DASAVATHARAM full film is available online. Click the foolowing link

http://www.tamiltubevid.com/2008/02/dasavatharam-view-online-download.html

theevu said...

//padippavan said...
The DASAVATHARAM full film is available online. Click the foolowing link//

fool owing link க்கு நன்றி.:)