Tuesday, February 07, 2006

எனது எம்ஜிஆர்


எனது எம்ஜிஆர் ..சூப்பர் ஸ்ரார் ரசிகரகள் கவனிக்க..
இப்போது எனக்கு வயது ஐம்பத்தொன்று.
என் வலது பக்கம் நான்கு வருடங்களுக்கு முன் பக்க வாத நோயால் செயலிழந்து போனது.


kumudam/snekidhi 02/06

சிநேகிதி ஆசிரியருக்கு,

இப்போது எனக்கு வயது ஐம்பத்தொன்று.

என் வலது பக்கம் நான்கு வருடங்களுக்கு முன் பக்க வாத நோயால் செயலிழந்து போனது. இந்தக் கடிதத்தைக்கூட இடது கையால்தான் சற்றே நடுக்கமான எழுத்துக்களால் எழுதி அனுப்பியுள்ளேன். என் இடது மார்பை புற்றுநோய் காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள். இதுபோன்ற ஒரு கஷ்டமான நேரத்தில், குமுதம் சிநேகிதி எனக்குக் காட்டும் அன்பாலும், ஆறுதலான வார்த்தைகளாலும், தன்னம்பிக்கை மொழிகளாலும்தான், நான் புதுப் பிறவி எடுத்ததுபோல வாழ்கின்றேன்.

நான் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோவில் பதினான்கு வருடங்கள் பணிபுரிந்தவள். அந்த நாட்களில் அவரை நேரில் பார்த்து, பேசி அவரின் குண இயல்புகளைக் கண்டு வியந்தவள் நான். என் ஒரே மகனுக்கும் சத்யா என்று அவருடைய அன்புத் தாயின் பெயரை வைத்திருக்கிறேன்!’

_ என்று மிக உருக்கமாக எழுதிய ஒரு கடிதம் நம் கவனத்தைக் கவர..

மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டி பொள்ளாச்சியில் வசிக்கும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி பிரபா மிக மரியாதையாக தலைவர் என்றுதான் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். மீது அப்படியரு அபிமானம், மரியாதை, அன்பு, விசுவாசம்!

எம்.ஜி.ஆர். உபயோகப்படுத்திய தொப்பியையும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் வைத்திருந்த ஒரு புத்தர் சிலையையும் தன் பூஜை அறையில் வைத்திருக்கிறார் இந்த வாசகி. இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் அவரை நினைத்து வணங்கித்தான் மற்ற காரியங்களையே ஆரம்பிக்கிறார்.

ஜோதி பிரபா எம்.ஜி.ஆரோடு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘எனது சித்தப்பா இராமலிங்கம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.. சித்தப்பா மூலமாகத்தான் நான் சத்யா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஒரே பெண்தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

இராமலிங்க அடிகளார் மீது எம்.ஜி.ஆருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அதனால் என் சித்தப்பாவை ‘இராமலிங்கம்’ என்று அழைக்காமல் ‘வள்ளலாரே’ என்றுதான் அழைப்பார்.

அவர் முதலமைச்சர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து பதினாலு வருடங்கள், நான் அவரிடம் வேலை பார்த்தேன். முதலமைச்சர் ஆனபின்பும், தொடர்ந்து மிச்சமுள்ள தன் படங்களை நடித்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

தான் ஒரு சி.எம். என்ற பந்தாவே இல்லாமல் நடிக்க வருவார். ஸ்டுடியோ தொழிலாளிகளின் மீது பழைய அன்பும், பாசமும் குறையாது பழகுவார். எந்தச் சூழ்நிலையிலும் தனது எளிமையையும், இரக்க குணத்தையும் விட்டு வெளியே வரவே மாட்டார்.

அவர் முதலமைச்சர் ஆன பின்பு, அவர் சத்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால், அவருக்கு வரும் எல்லா போன் கால்களுக்கும் பதில் சொல்லவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். சிலசமயம் மதியம் உணவுகூட சாப்பிடாமல் இருப்பேன். ஞாபகமாக வந்து ‘சாப்பிட்டாயா? முதலில் போய்ச் சாப்பிடு.. அப்புறம்தான் வேலை’ என்பார்.

யார் தப்பு செய்தாலும் உடனே கண்டித்து விடுவார்.. அப்புறம் பத்து நிமிடங்கள் கழித்து அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரின் இயல்பு! எத்தனையோ சினிமாப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வந்து போகும் இடத்தில் அமைதியான, அலட்டல் இல்லாத ஒரு பெண்ணாக நான் வேலை செய்வதை எல்லோரிடமும் பாராட்டிப் பேசுவார்.

தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரிடம் அதிகாரத் தோரணையே கிடையாது. ஆடம்பரமும் கூட கிடையாது. தன்னைப் பிடிக்காத வர்களைக் கூட தன் பழக்கத்தால், தன் அணுகு முறையால், தன்னிடமே வரும்படி செய்து விடுவார். வயதில் பெரியவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மிகவும் மரியாதை கொடுப்பார். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

சத்யா மூவிஸ் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு டெய்லர், மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விட்டார். அவருக்குத் திருமண வயதில் மூன்று பெண்கள். அந்தப் பெண்களுக்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னே நின்று செலவு செய்து விளம்பரம் கூட இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.

அங்கு வேலை செய்யும் பொழுது நான் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். அவர் தன் காரையே தந்து உடனே என்னை மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொன்னார். மேனேஜர், உதவியாளர் போன்றவர்களையும் என்னுடன் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

நான் வேலைக்குத் திரும்பியதும், ‘உனக்கு நரம்புத் தளர்ச்சி வரும் அளவுக்கு என்ன கவலை.. என்ன பிரச்சனை? இந்த இருபது. வயதில் இப்படியெல்லாம் வரக்கூடாது. உனக்கு என்ன உதவி வேண்டும் சொல்’’ என்று கேட்டபொழுது நான் மிகவும் நெகிழ்ந்து நின்றேன்..!

அவர் ஸ்டுடியோவில் இருக்கும் பொழுது குருவிக்காரர்களும், நரிக்குறவர்களும் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். ஒரு தடவை ஒரு காவலாளி அவர்களை உள்ளே விட மறுத்தார். இதைக் கவனித்த தலைவர் காவலாளியைக் கண்டித்து விட்டு, உடனே அவர்களை உள்ளே கூப்பிட்டார். சரிசமமாக அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசி, அவர்களுக்குப் பல பரிசுகளும் கொடுத்து, சாப்பிட வைத்து அனுப்பினர்.

தலைவருக்கு ‘‘அம்மா’’ மீது மிகவும் பாசம். இது அவருடைய பல படங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு வருடமும் அவர் தன் அம்மாவின் நினைவு நாளன்று மௌன விரதம் இருப்பார். முக்கியமான விஷயங்களை எழுதிக் காட்டுவார்.

தனது செயினில் இருந்த தன் அம்மா படம் பதித்த டாலரின் மீது தினமும் சந்தனம் வைத்து அதையும் பனியனுக்குள் வைத்துக் கொள்வார். தலைவருக்கு கடவுள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சத்யா ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிறைய பரிசுகள் வழங்கி அத்தனை பேர் மனசையும் கொள்ளை கொள்வார்.

சென்னையில் இருந்தால், எந்த நேரமாக இருந்தாலும், வீட்டுக்குப் போய் விடுவார். தலைவருக்கு மீன் உணவு ரொம்பவும் பிடிக்கும். அதைப் போல கீரை உணவையும் விரும்புவார். டீ, காபிக்கு பதிலாக பால் குடிப்பார். மது, புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஒடிக்கோலன் போட மிகவும் பிடிக்கும்.

தன் ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி பெரிய விருந்து கொடுப்பார். எந்த விருந்தாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும் வேகமாகச் சாப்பிட்டு விட்டு முதல் ஆளாக எழுந்து விடுவார். சமையல் கட்டுக்கும், பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்துக்கும் போய் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குச் சாப்பாடு இருக்கிறதா? சாப்பிட்டார்களா? என்று தனிப்பட்ட முறையில் கவனிப்பார். இது எந்தத் தலைவரும் சாதிக்க முடியாத எளிமையான அணுகுமுறை!

நான் அங்கே வேலைக்குப் போன புதிது... அந்த சமயம், அரசியலில் கலைஞருக்கும், தலைவருக்கும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்த நேரம். கலைஞர் போனில் பேசினார். டெலிபோன் ஆபரேட்டராக நான் இருந்ததால் அவரது தொலைபேசி அழைப்பை நான்தான் கேட்டேன். உடனே தலைவரிடம் ‘‘கருணாநிதி பேசினார்’’ என்று நான் பாட்டுக்குச் சொல்லி விட்டேன். உடனே தலைவர் என்னைக் கண்டித்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். பெயரெல்லாம் சொல்லக்கூடாது.. உன்னை விட வயதில் பெரியவர்கள் பெயரைச் சொல்வது தவறு!’’ என்றார்.

தலைவர் வீட்டிலேயே வளர்ந்த அவரது. அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வந்தது. சரியாக தலைவர் வெளியிலிருந்து வீடு திரும்பிய சமயம் இருக்கும்படியாக பார்த்து மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டிக் கொண்டாட ஆரம்பித்தனர்

‘‘ஏற்றிய ஒளியை பிறந்த நாள் அன்று அணைப்பது தவறு.... கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்! நமக்குத் தேவையில்லை. நமது பண்பாட்டுப்படி விளக்கேற்றி விட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்துக்களையும்தான் நாம் பெற வேண்டும்!’’ என்று சொல்லிக் கண்டித்தார்.

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். தனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வைத்துக் கொள்ளாத ஒரு மனைவி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் நலம் மட்டுமே.

தலைவர் துரோகம் செய்பவர்களை விட்டு ஒதுங்கி விடுவார். அல்லது ஒதுக்கி விடுவார். சினிமாத் துறையில் நஷ்டப்பட்ட எத்தனையோ நல்லவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

தான தருமங்கள், படிக்க உதவி, வேலைவாய்ப்பு, எளிய மக்களுக்கு நலவாழ்வு இந்த இலட்சியத்தை கடைசி வரை கை விடவில்லை.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அரசியல் நடத்தினார். தனிப்பட்ட வாழ்விலும் அதையேதான் கடைப் பிடித்தார். அதனால்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது இவர் குணமடைய பள்ளி வாசல்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் இந்துக்கள் கோயில்களிலும் இடைவிடாது பிரார்த்தனைகள் நடந்தன!..

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நிஜம்! என்று எம்.ஜி.ஆரின் நினைவலைகளில் நெகிழ்கிறார் ஜோதி பிரபா கிருஷ்ணன்.

kumudam/snekidhi

Read More...