Friday, March 31, 2006

(தின) கரன் VS மலர்

50 ஆண்டுகளாக தமிழ்ப்பத்திரிகை உலகம் எந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்தது?

Read More...

Tuesday, March 28, 2006

புஸ்பராஜா ஒரு நாட்டுப்பற்றாளரா?

ஒரு 70 களில் வண்ணைஆனந்தன் சபாலிங்கம் புஸ்பராஜா மாவை சேனாதிராஜா காசி ஆனந்தன் என்ற பெயர்கள் யாழில் இளைஞர்களுக்கு மிகப்பிரபலம்.சிங்கள அரசின் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் பல சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்.விடுதலைப்புலிகள் தோன்றாத அல்லது தம்மை வெளிப்படுத்தாத காலமது

இவர்களது வரலாறு பெரிதாக இன்றைய தலைமுறைக்கு தெரியாது .தெரியவருமோ என்பதும் நிச்சயமில்லை.வண்ணை ஆனந்தனும் சபாலிங்கமும் புஸ்பராஜாவும் இறந்துவிட்டார்கள்.புஸ்பராஜா மட்டும் அவர் எழுதிய புத்தகம் மூலமாக இன்னமும் பல ஆண்டுகள் உயிர் வாழ்வார்.

புஸ்பராஜா ஒரு நாட்டுப்பற்றாளரா என்ற கேள்விக்கு விடையை காலம்தான் சொல்லவேண்டும்.

புஸ்பராஜா பற்றிய ஒரு கட்டுரையை அ. முத்துலிங்கம் அவர்கள் பதிவுகள் தளத்தில் எழுதியுள்ளார் .அந்த கருத்துடன் ஒன்றி அதை இங்கு மறு பதிப்பிடுகிறேன் .

நன்றி பதிவுகள் .திரு அ.முத்துலிங்கம் அவர்கள்.

இலக்கியம்!
சொந்த நாட்டுக்குப் போ!
அ.முத்துலிங்கம்

இறப்பதற்கு சில நாட்கள் முன்பு நான் சுந்தர ராமாசாமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 'இளையராஜா ஒரு மேதை. அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரைப் பற்றி எழுதுவேன்' என்று சொன்னார். கடைசி வரை அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். இளையராஜா பற்றி ஒன்றும் எழுதாமலே சுந்தர ராமசாமி இறந்துபோனார். சில விசயங்களை தள்ளிப்போடக் கூடாது; முக்கியமாக பாராட்டுகள். 2004ம் ஆண்டு எனக்கு மிகவும் மோசமான ஆண்டு. கோடைக்கால முடிவில் எனக்கு தீவிரமான ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. பதினாலு நாட்கள் படுத்த படுக்கையாக, அசைய முடியாமல் ஒரே இடத்தில் கிடந்தேன். அந்தச் சமயங்களில் எனக்குப் பக்கத்தில் இருந்தது ஒரேயொரு புத்தகம். சி.புஸ்பராஜா எழுதிய 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்.' கடுமையான மருந்துகள் உள்ளே எடுத்ததால் நித்திரையும், முழிப்புமாக என் காலம் கழிந்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும் நான் அந்தப் புத்தகத்தை நெற்றிக்கு மேலால் பிடித்து படித்தேன். நெஞ்சில் அது விரித்தபடி படுத்திருக்க நான் நித்திரையாகினேன். மீண்டும் எழும்பியதும் விட்ட இடத்திலிருந்து படித்தேன். இப்படி 14 நாட்கள் என் பக்கத்தில் உறுதுணையாக, நண்பனாக அந்தப் புத்தகம் இருந்தது. 631 பக்கங்களையும் இந்தக் காலகட்டத்தில் நான் படித்து முடித்தேன். சில அத்தியாயங்களை இரு தடவை; சில பத்திகளை இரு தடவை; சில வசனங்களை இரு தடவை; சில வார்த்தைகளை இரு தடவை. என்னை அது மிகவும் பாதித்தது.

புஸ்பராஜாவை எனக்கு முன்பின் தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. எப்படியும் அவரைத் தொடர்புகொண்டு பாராட்டவேண்டும் என்று நினைத்தேன். ஒருவருக்கும் அவருடைய முகவரியோ, தொலைபேசி இலக்கமோ தெரியவில்லை. அப்படியே காலம் கடந்துபோய் விட்டது. இனிமேல் நான் எவ்வளவுதான் முயன்றாலும் அது முடியாத காரியம். ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் அதை உடனேயே செய்யவேண்டும். தூற்றுவதாயிருந்தால் தள்ளிப் போடலாம், பாதகமேயில்லை. சுந்தர ராமசாமிக்கு நடந்ததுபோலவே எனக்கும் நடந்தது. மரணம் முந்திக்கொண்டு விட்டது.

சில நண்பர்கள் சொன்னார்கள் புஸ்பராஜா எழுதிய நூலில் பல சரித்திரப் பிழைகளும், தகவல் பிழைகளும் இருக்கின்றன என்று. இருக்கலாம். ஆனால் அவரே சொன்னதுபோல நான் இதை ஒரு ஆய்வு நூலாகப் பார்க்கவில்லை. சரித்திர மாணவர்களுக்கு பயன்படும் முதல் ஆவணமாகவே பார்த்தேன். இனிமேல் வரும் பதிப்புகளில் தகவல் பிழைகளை திருத்திக் கொள்ளலாம். நான் மெய்யாகவே அனுபவித்தது அவருடைய இயல்பான நடையையும், இலக்கிய மொழியையும், மருத்துவர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் புஸ்பராஜா பிரான்ஸில் இருந்து புறப்பட்டு இந்தியா போனார். மரணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கலாம் என்று நினைத்தார். அவர் செய்து முடிப்பதற்கு இந்தப் பூமியில் இன்னும் சில இலக்கிய வேலைகள் இருந்தன. சிறிது அவகாசம்தான் தேவைப் பட்டது. இந்தியாவில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் 'ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் சொந்த நாட்டுக்கு போங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். 56 வருடங்களாக சொந்த நாடு ஒன்றைத் தேடித் திரிந்தவருக்கு இந்த வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும். மறுபடியும் பிரான்ஸ் தேசம் வந்தார். அங்கேயே உயிரை விட்டார்.

The View from Castle Rock ல் அலிஸ் மன்றோ சொன்னது நினைவுக்கு வருகிறது. 'It cannot be my home. It can be nothing to me but the land where I will die.' புகுந்த நாடு ஒரு போதும் சொந்த நாடாக மாறமுடியாது. நீ இறக்கப் போகும் நாடாக வேண்டுமானால் இருக்கலாம்.

கனடாவில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கற்சுறா அவருடன் தான் இறுதி நாட்களில் தொலைபேசியில் உரையாடியதை நினைவு கூர்ந்தார். புஸ்பராஜா சொன்னார், 'நண்பரே, மரணம் பின் வாசல் வழியாக வரும் என்று நினைத்தேன். அது முன் வாசல் வழியாக வந்துவிட்டது.' புஸ்பராஜா வாசல் கதவில் மரணத்தை ஒரு சில மாதம் தடுத்துவைக்க நினைத்தார். 'நான் எழுத நினைத்ததை முடிக்க எனக்கு ஒன்பது மாதங்கள் அவகாசமே போதும்' என்று வருந்தினார். அப்படி வருத்தப்படுவதற்கு அவசியமே இல்லை.

திருவள்ளுவர் எத்தனை நூல்கள் எழுதினார். ஒன்றுதான், அது திருக்குறள். கணியன் பூங்குன்றனார் 1800 வருடங்களுக்கு முன்னர் படைத்த ஒரு கவிதைக்காக இன்றுவரை போற்றப்படுகிறார். ஹார்ப்பர் லீ தன் வாழ்நாளில் எழுதிய புகழ் பெற்ற ஒரேயொரு நாவல் To Kill a Mocking Bird. பிரிட்டிஷ் இளம் பெண் Emily Bronte படைத்த வாழ்நாள் சாதனை இலக்கியம் Wuthering Heights.

இந்த வகையில் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது.

Read More...