Tuesday, September 27, 2005

Island of Blood

பிரபாகரனை நான் சந்தித்தமை வழமையான வன்னிக்காடு, பாதுகாப்பு இல்லங்களில் இடம்பெற்ற சந்திப்புக்களை விட முரண்பட்டதாக இருந்தது.





Anita Pratap






1987 இல் புதுடில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர அசோகா ஹோட்டலில் பிரபாகரனை நான் சந்தித்தமை வழமையான வன்னிக்காடு, பாதுகாப்பு இல்லங்களில் இடம்பெற்ற சந்திப்புக்களை விட முரண்பட்டதாக இருந்தது.

பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான வாரத்தில் அச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒப்பந்தமே இலங்கைத் தீவின் தமிழ்ப் பகுதிகளுக்கு இந்தியப் படையினர் செல்வதற்கு வழிவகுத்தது. அத்தருணம் பிரபாகரனுக்கு மிக மோசமானதும், இம்சையானதுமான காலப் பகுதியாகும். அவர் இந்தியாவின் கைதியாக இருந்தார்.

ஐந்து நட்சத்திர வசதியுடன் கூடிய ஹோட்டலில் இருந்தாலும் இந்தியத் துருப்புக்களின் காவலுக்கு மத்தியில் வீட்டுக் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பின்றி அவர் வெளியே செல்ல முடியாது.

அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் யாவும் அவதானிக்கப்பட்டன.

அவருடன் அரசாங்க அதிகாரிகள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பிலிருந்து இந்திய இராஜதந்திரிகள் புதுடில்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரபாகரனைத் தூண்டியிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஹெலிகொப்டரிலேயே பிரபாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஹோட்டலுக்குச் சென்ற பின்பே, தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை அவர் விளங்கிக் கொண்டார்.

அசோகா ஹோட்டலில் தான் பெற்ற அனுபவம் இந்தியாவுடனான தனது பகைமையுணர்வை இறுக்கமடையச் செய்தது என்று பல காலத்திற்குப் பின்பு என்னிடம் அவர் கூறியுள்ளார்.


தான் தந்திரமான முறையில் உதவியின்றி இருந்ததாகக் கருதிய அவர், இந்தியர்களின் கருணையை இனிமேல் ஒருபோதும் நாடிச் செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று பிரதிக்ஞை எடுத்திருந்தார்.


இந்திய இராஜதந்திரிகள் தம்மை ஒரு சிறு குழந்தையைப் போன்று நடத்தியவிதம் குறித்து அவர் முரண்பாடு கொண்டிருந்தார். நாட்டுப் ப+சணிக்காய், ஏழை ஒன்றுவிட்ட சகோதரன் போன்று அவரை நடத்தினர்.

தங்கள் எண்ணத்திற்கேற்ப நடத்த முயன்றனர். அவர் ஒரு குழுவின் தலைவரென்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் மரியாதை செலுத்தவில்லையெனவும் அவர் கூறினார்.

அச்சமயம், பங்க@ரில்'இந்தியா ருடே" யில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிரபாகரனிடம் பேட்டி எடுப்பதற்காக புதுடில்லிக்குச் சென்றேன்.


டில்லிப் பயணத்திற்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னமே கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் பிரபாகரனை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்பது தொடர்பாக என் மனதில் திட்டமொன்றைத் தீட்டியிருந்தேன். செய்தி சேகரிக்கச் செல்லும் போது ஒரு போதுமே கொண்டு செல்லாதவற்றை பொதியில் கட்டினேன். அவை பட்டுச்சேலைகள்.

அச்சமயம் புதுடில்லியில் பெரிய அமர்க்களமாக இருந்தது.

ராஜீவ்காந்தி ஒரு வெற்றிகரமான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கையுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளும் திட்டத்தை உருவாக்கியிருந்தார். பிரபாகரனும், அதற்கு இணங்கியிருந்தார். உருப்பெருப்பிக்கப்பட்ட செய்திகள் காற்றில் பறந்தன.

ராஜீவ் புதிய நட்சத்திரமாக ஜொலித்தார்.

ஆனால், அவரை விமர்சிப்போர் போபர்ஸ் பீரங்கியிலும் பார்க்க உரத்துக் குரல் எழுப்பினர்.
ஆயினும் அந்த முழக்கத்தை இந்த வெற்றி சத்தமிழக்க வைத்துவிட்டது. சுவீடனிடமிருந்து போபர்ஸ் பீரங்கிகள் கொள்வனவு செய்தமை தொடர்பான மோசடிகள் குறித்து இச்சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன்பே பத்திரிகைகளில் பெரிதாக வெளிவந்தன. பீரங்கிக் கொள்வனவு பேரப் பேச்சில் 50 மில்லியன் டொலர்களை ராஜீவ் பெற்றுக் கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

இந்த அவதூறு ராஜீவின் செல்வாக்கைப் பெரிதும் பாதித்தது. இந்தச் 'சமாதான குண்டு"டன் போபர்ஸ் மோசடிக் குற்றச்சாட்டு மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்று ராஜீவின் உதவியாளர்கள் கணிப்பீடு செய்தனர்.

இலங்கையின் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் ராஜீவுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பது பற்றிய நோக்கங்களை அவரின் ஆலோசகர்கள் சிந்திக் கசியவிட்டனர்.

பிரபாகரன் ஹோட்டலின் ஐந்தாம் மாடியில் வைக்கப்பட்டிருந்தார்.

நானும் ஐந்தாம் மாடியில் மற்றொரு பகுதியில் தங்கினேன். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அசோகா ஹோட்டல் மிகப் பிரமாண்டமானது. பெரிய நீண்ட தாழ்வாரங்களைக் கொண்டது. முதல்நாள் பிரபாகரனைச் சந்திக்க நான் முயற்சிக்கவில்லை. நான் ஒரு பட்டுச்சேலையை அணிந்தேன். பிளாஸ்ரிக் குப்பைக் கூடையை எடுத்து வைத்துக்கொண்டு ஹோட்டல் பணியாள் போன்று பாசாங்கு செய்து கொண்டு ஐந்தாம் மாடி தாழ்வாரமூடாக நடந்து சென்றேன்.

ஹோட்டலின் ஒரு பகுதி நுழைவாசலில் இரு காவலர்கள் நின்றனர். அப்பகுதியில் தான் பிரபாகரன் இருக்கிறார் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டேன்.

அதனால், அந்த மார்க்கமாகச் சென்றேன். காவலர்கள் என்னைத் தடுத்து நிறுத்த முயன்றனர். புன்முறுவலுடன் பராமரிப்பு பணிப்பிரிவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னேன். என்னை உள்ளே செல்ல அனுமதித்தனர்.


அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேவு பார்க்கும் வேலையை மட்டும் செய்தேன். அதாவது பிரபாகரன் தங்கியிருந்த அறை எங்கிருக்கிறது? பாதுகாப்பு என்ன மாதிரி என்பதையே நோட்டம் விட்டேன். பின்னர் தாழ்வாரத்திற்கு வந்து வலது பக்கமாகச் சென்றேன். இந்தத் தாழ்வாரத்தை அண்டியிருந்த முதலாவது அறையில் சீருடையின்றி பல காவலர்கள் இருந்தனர். அதுதான் பிரபாகரனின் அறை என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. எனது நடையை மெதுவாக்காமல் சென்றுவிட்டேன்.


பின்னர் தாழ்வாரத்தை அண்டியிருந்த அறைகள் மூடப்பட்டு இருக்கின்றனவா? இல்லையா? என்பதைச் சோதனை செய்வது போலப் பாசாங்கு செய்து கொண்டு வந்தேன். அது எனது அன்றாட வேலையென்று காட்டிக்கொள்ளும் விதத்தில் பாசாங்கு காட்டினேன். ஹோட்டல் பணிப்பெண்கள் போன்று திறம்பட நான் நடித்தேன். அங்கிருந்த காவலர்களின் பார்வை என் பின்பக்கத்தைத் துளைத்துக்கொண்டு செல்லும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது.

சாதுர்யத்துக்கு அதிர்ர்;டக்காற்று அடித்தது.


ஒரு அறையின் கதவு இலேசாகத் திறந்திருந்தது. தட்டிவிட்டு சில செக்கன்கள் காத்திருந்தேன். பின் தள்ளிக்கொண்டு நம்பிக்கையுடன் உள்ளே சென்றேன். அந்த அறை வெறுமையாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். சிறிய ப+ச்சாடியில் வாடிய ப+ விழுந்து கிடந்தது. அதனை எடுத்துக் கொண்டேன்.

கண்காணித்துக் கொண்டிருக்கும் காவலர்கள் நான் எனது கடமையைச் செய்கிறேன் என்று நினைப்பதற்காக இதனைச் செய்தேன். பின்னர் காவலர்களைக் கடந்து சென்றேன்.
அவர்களைப் பார்த்து மிகச் சாந்தமாகப் புன்முறுவல் ப+த்தவாறு சென்றேன். ஏனெனில் பின்னர் அவர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடனே அவ்வாறு செய்தேன்.

மறுதினமும் முதல்நாள் மேற்கொண்ட நடைமுறையையே பின்பற்றினேன். புருவங்களை உயர்த்திப் பார்க்காமலேயே வாசலில் நின்ற இரு காவலர்களும் நான் உள்ளே செல்ல அனுமதித்தனர். ஹோட்டல் பணிப்பெண்ணென என்னையும் அடையாளம் கண்டுகொண்டனர்.

ஆனால், இத்தடவை வலது பக்கம் சென்று பிரபாகரனின் அறைக்கதவைத் தட்டினேன். வெளியில் காவலுக்கு நின்ற பொலிஸார் சற்றுச் சோம்பலாக என்னைப் பார்த்தனர்.

கதவைத் திறந்தவர் திலீபன்.

பிரபாகரனின் நம்பிக்கையான உதவியாளர்களில் ஒருவர். சென்னையில் அடிக்கடி அவரைச் சந்தித்துள்ளேன். 25 வயது நிரம்பிய அவர் மிக மென்மையாகப் பேசுபவர். சாந்தமான சுபாவம் கொண்டவர். அவரின் பேச்சிலும், போக்கிலும் கல்வி வாசனை வீசும்.

சில மாதங்களுக்குப் பின்பு யாழ்ப்பாணத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து திலீபன் இறந்துவிட்டார். சயனைட் அருந்தி இறக்காமல் காந்தியவழியில் மரணித்த சில விடுதலைப்புலி உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.


திலீபன் என்னை அடையாளம் கண்டுகொள்ள நீண்ட கணப்பொழுது எடுத்தது. எனது உத்தியோக வாழ்வில் என்னைப் பலர் சேலை அணிந்து பார்த்ததில்லை. அவர்களைப் போன்ற ஒருவராகவே திலீபனும் இருந்தார். துப்புரவுபடுத்த வந்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கேட்கும்படியாக உரத்துக் கூறியபடி அவருக்கு (திலீபனுக்கு) கண்ஜாடை காட்டினேன். அவர் பின்னுக்கு நகர்ந்தார்.

. முதலில் என்னைக் கண்டவுடன் பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் திலீபன் மற்றும் அங்கிருந்தோரைப் போலவே பெரிதாக புன்முறுவல் ப+த்தார்.

நான் உடனடியாக வெளியே போகவேண்டுமெனவும் வெளியிலுள்ள பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நான் அவரிடம் கூறினேன்.

பின்னர் புகைப்படப்பிடிப்பாளருடன் பேட்டிக்காக திரும்பி வருவேன் என்று அவருக்குக் கூறிவிட்டு பாவிக்கப்படாத இரு ஆர்;ட்ரேக்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றேன்.


அன்றைய தினமே 'இன்டியா டூடே"யின் பிரபல புகைப்படப்பிடிப்பாளர் பிரமோத் புர்;கர்ணாவுடன் பேட்டியெடுக்கச் சென்றேன். குண்டுவெடிப்பு, படுகொலை நடந்த இடங்களுக்கு முதலாவதாகச் செல்லும் பத்திரிகையாளராக நான் இருந்தால் புர்;கர்ணா முதல் ஆளாக அந்த இடத்தில் நிற்கும் புகைப்படப்பிடிப்பாளராகும்.

பிரபாகரன் தங்கியிருந்த அறைக்கதவை நாம் அடைந்தபோது காவலர்கள் எம்மைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் முன்னர் இருந்த காவலர்கள் அல்ல. கடமை நேரம் மாறிவந்த காவலர்கள் அவர்கள். பிரபாகரன் எம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர்களுக்குக் கூறினேன். எனது பெயர், எங்கிருந்து வருகிறேன் என்ற விபரங்களைத் தடுத்து நிறுத்திய காவலர் கேட்டார். எனது பெயர் அனிதா பிரதாப். நான் எங்கிருந்து வருகிறேன் என்பது அவருக்கு (பிரபாகரனுக்கு) தெரியும். நான் துரிதமாகத் திரும்பிப் போகவேண்டும். ஆதலால் விரைவாக அனுமதியுங்கள் என்று அதிகாரத்தொனியில் கூறினேன்.


1980களில் பெண் பத்திரிகையாளர்கள் பொதுவாக வெளியாரினால் அடையாளம் கண்டுகொள்ளப்படாத காலகட்டம் அது.

அதிலும் மோதல் நடைபெறும் இடங்கள், இந்த மாதிரியான பகுதிகளில் பெண் பத்திரிகையாளர்கள் செல்வது இல்லை. இதனால், நான் ஒரு பத்திரிகையாளரென காவலர்கள் சிறிதும் சந்தேகிக்கவில்லை. இதனாலேயே தடை செய்யப்பட்ட பல இடங்களில் நான் நுழைந்து விடக்கூடியதாக இருந்தது. எனது குறிப்பேட்டில் ஒரு கடதாசி துண்டைக் கிழித்து எனது பெயரை அதில் எழுதி காவலரிடம் கொடுத்தேன். அவர் அதனை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.


பிரபாகரனின் தொனியிலிருந்து நான் ப+ரணமாக மாறுபட்டிருந்தேன். ராஜீவ்காந்தியின் அலுவலகத்திலிருந்து வெளிக்கிளம்பிய நம்பிக்கையின் செல்வாக்கு பல்வேறு விதத்தில் எம்மை ஆட்கொண்டிருந்தது. ஆனால், பிரபாகரன் நம்பிக்கையிழந்தவராகவே காணப்பட்டார்.
இலங்கை-இந்திய உடன்படிக்கை பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்று அவர் சிந்தித்திருக்கவில்லை.

தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்படவுள்ள இந்தியப்படையினர் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்காவிடின் நான் அவர்களுடன் போராட வேண்டியிருக்கும் என்று பிரபாகரன் கூறினார்.

அபாயமணி என் செவிகளில் கிணுகிணுக்க ஆரம்பித்தது.

உடன்படிக்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முடிவல்ல. அதுவொரு அத்தியாயம். இலங்கையில் ஒரு தீர்வொன்று எட்டப்படப் போகிறது என்று நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு தடவையும் அந்தச் சிந்தனை தவறு என்பது நிரூபணமாகி விடுகிறது.

நிலைமை மேலும் மோசமடைந்து விடுகிறது. இது அந்நாட்டின் சாபக்கேடாக உள்ளது. நீண்ட சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவது போல் தோன்றினாலும் அது பயணித்துக் கொண்டிருக்கும் ரயிலின் முன்பக்க வெளிச்சம் போன்றுதான் உள்ளது.

பிரபாகரன் பேசியபோது அவரின் முகபாவத்தை அவதானித்தபோது அவர் இந்தியர்களுடன் போரிடுவாரென்பது குறித்து எனக்கு சந்தேகமில்லாலே இருந்தது.

அவர் ஒரு போதும் வெற்று வேட்டான அச்சுறுத்தலை விடுபவரல்ல. நான் அலுவலகத்துக்குத் திரும்பிச் சென்று பேட்டியைத் தயாரித்தேன்,
'உடன்படிக்கை" உறுதியான சமாதானத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்ற பிரபாகரனின் நம்பிக்கையீனமான முன்கூட்டித் தெரிவித்த கருத்தையே பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டு அதனைப் ப+ர்த்தி செய்தேன்.



மூன்று மாதத்திற்குள்ளேயே அந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. உடன்படிக்கை முறிவடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை நான் சந்தித்தேன்.


அந்தப் பேட்டி நேரம் முழுவதும் தனது சிறுத்தைக் குட்டியான சீதாவை வருடியவாறு பிரபாகரன் இருந்தார். அது மேசையின் மீது படுத்துக் கிடந்தது. அதுவொரு கவர்ந்திழுக்கக்கூடிய சிறுத்தைக்குட்டி. சில மாதங்களுக்குப் பின்னர் அது இறந்து விட்டது. அதனை இந்தியப் படையினர் கொன்று விட்டனர்.


கிட்டத்தட்ட பிரபாகரனை இந்தியப் படையினர் பிடித்து விடக்கூடிய தருணமாக அது இருந்தது. பிரபாகரனின் மறைவிடத்தைத் தாங்கள் சூழ்ந்துக் கொண்டிருந்ததாக இந்தியப்படையினர் தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்கு சில கணங்கள் முன்பாக பிரபாகரன் சமாளித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.


அவர் துரிதமாகச் சென்றதால் அவரின் செல்லப்பிராணியை விட்டுச் செல்ல நேரிட்டது.

அதனைப் புகைப்படங்கள் எடுத்து இந்தியர்கள் தாங்கள் உண்மையாகவே பிரபாகரனை நெருங்கிவிட்டதாக நிரூபிப்பதற்கு இறந்துகிடந்த சிறுத்தையைக் காட்டினார்கள்.


1987 இல் பிரபாகரனை நான் பேட்டி கண்டபோது குறிப்பிடத்தக்க முக்கியமான மாற்றம் அந்தக் கெரில்லாத் தலைவர் உடல் ரீதியாக அடைந்திருந்த மாற்றமாகும்.

ஆஜானுபாகுவான தோற்றம், அடர்த்தியான கத்தரித்த தலை மயிர் என்பவற்றுடன் அவர் காணப்பட்டார்.


பேட்டியின் போது மிக சாவகாசமாக காணப்பட்டார். பேட்டி மணிக்கணக்கில் நீடித்தது. நான் ஆங்கில மொழியில் கேள்வி கேட்டேன். அக்கேள்விகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். அவர் அதற்குத் தமிழில் பதிலளிப்பார். எனக்கு தமிழ்மொழி விளங்கும். ஆயினும், அவர் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன். ஏனெனில், நான் புரிந்து கொண்டவை மிகச்சரியானதாக இருக்கவேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டுக் கொண்டேன். இது நேரமெடுக்கும் விவகாரமாகும்.


ஆனாலும், எப்போதுமே பிரபாகரன் பொறுமையைக் கடைப்பிடித்தார்.


பேட்டி அரைவாசியில் சென்று கொண்டிருந்த சமயம் பிரபாகரனின் திருகோணமலைப் பகுதி தளபதி அங்கு வந்தார். சிறிய கண்களுடன் வேறுபட்ட தோற்றத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்தால் இரை தேடும் புலியைப் போன்று காணப்பட்டார்.

ஏதோவொன்று நடத்திருக்க வேண்டும். பிரபாகரனின் காதுக்குள் தமிழில் குசுகுசுத்தார்.
காதுகொடுத்துக் கேட்க முயற்சித்தேன். ஆனால், அவர் என்ன கூறினார் என்பதை என்னால் கிரகித்துக் கொள்ளமுடியவில்லை. ஆனால், அவர் ஒரு கவலையான செய்தியைத்தான் கூறினார் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.


ஒருவருடைய முகம் சடுதியாக மாறுதலடைவதை நான் ஒருபோதும் கண்டதில்லை. புலேந்திரன் கூறுவதைப் பிரபாகரன் செவிமடுக்க ஆரம்பித்த போதும் அவருடைய முகம் மாற்றமடையாமல் இருந்தது. தான் கொண்டுவந்த செய்தியை விபரமாக புலேந்திரன் தொடர்ந்து கூறியபோது, பிரபாகரனின் முகம் மாறுதலடைய ஆரம்பித்தது.

அவர் கூறிமுடிக்க சுமார் 5 நிமிடங்கள் எடுத்தன.

பிரபாகரனின் முகத்தில் இருண்டு சோக ரேகைகள் படிந்தன.
அவரின் கண்ணிமைகள் சிலிர்த்து கரிப்படைந்தது.
அறுபது பாகை கோணத்தில் புருவங்கள் உயர்ந்தன. கண்கள் இகழ்ச்சியாகச் சரிந்தன. வாய் இறுகமூடியது. குழம்பிப் போன தன்மை தெரிந்தது. அவர் சற்றுக் கருமையான நிறமுடையவர். ஆனால், பச்சோந்தி போன்று மாறுபட்ட தோற்றத்தில் என் கண்பார்வைக்குத் தென்பட்டார். முகம் இறுகிக் கருமையாகியது. கிட்டத்தட்ட அவரின் தலைமயிரையொத்த நிறமாகத் தென்பட்டார்.

எனக்கு மயிர் கூச்சல் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

முழுமையான மாற்றத்தை அவரில் அவதானித்தேன். இடி இடிப்பதற்கு முன்னராக காணப்படும் மேக மூட்டம் போன்று அவர் காணப்பட்டார்.
ஆனால், அவர் எதனையும் வெளிப்படுத்தவில்லை. உணர்ச்சியை வெளிக்காட்டாதவராக அமர்ந்தார். மென்மையாகப் பேசினார். அவரின் உதடுகளிலிருந்து தப்பியோடிய வார்த்தைகள் சீறொலியாக எழுந்தன.


எனது ஒரு பையன் காயமடைந்தால் அவர்களில் பத்துப் பேரைக் கொல்வேன் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். எனது ஆட்கள் மீண்டும் தாக்கப்பட்டால் நாம் ஆயுதங்களை மீண்டும் எடுக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சில தமிழ்ப் பொதுமக்களும், புலி உறுப்பினர்களும் காயமடைந்திருந்தனர்.

இந்தியப் படையினருக்கே இந்த அச்சுறுத்தலை பிரபாகரன் விடுத்திருந்தார்.


அவர் விடுத்த செய்தி தெளிவானது. அதாவது, தமிழர்களின் பாதுகாப்பை இந்தியர்கள் உறுதிப்படுத்தாவிடின் புலிகள் மோதலுக்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.

விடுதலைப்புலி உறுப்பினர் ஒவ்வொருவரினதும் மரணத்திற்கும், காயத்திற்கும் அவர் பழிவாங்குவார் என்பதே அவரின் செய்தியாகும்.

தொடரும்..

6 comments:

சயந்தன் said...

தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.. நன்றி

Anonymous said...

எழுதுங்கள்

கொழுவி said...

இதுபற்றி வா.மணிகண்டனின் பதிவில் மாலன் உட்படப் பலர் கதைத்தனர். இச்சுட்டி அவர்களுக்கு உதவக்கூடும்.

அனிதாபிரதாப் மீது எனக்கு விமர்சனமுண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியப் படைகளின் அட்டகாசங்களை குறிப்பாக பாலியற்குற்றங்களை, இவற்றில் பல இட்டுக்கட்டப்பட்டவை என்ற தொனியில் கருத்துத் தெரிவித்திருந்ததாக அறிகிறேன்.

Anonymous said...

நன்றி சயந்தன் கொழுவி மற்றும் நண்பர்

வா மணிகண்டனின் சுட்டியை தெரியப்படுத்த இயலுமா?

Anonymous said...

http://pesalaam.blogspot.com/2005/08/blog-post_26.html

This is the URL.

Anonymous said...

இந்தப் பதிவுக்கு நன்றி.