Tuesday, March 28, 2006

புஸ்பராஜா ஒரு நாட்டுப்பற்றாளரா?

ஒரு 70 களில் வண்ணைஆனந்தன் சபாலிங்கம் புஸ்பராஜா மாவை சேனாதிராஜா காசி ஆனந்தன் என்ற பெயர்கள் யாழில் இளைஞர்களுக்கு மிகப்பிரபலம்.சிங்கள அரசின் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் பல சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்.விடுதலைப்புலிகள் தோன்றாத அல்லது தம்மை வெளிப்படுத்தாத காலமது

இவர்களது வரலாறு பெரிதாக இன்றைய தலைமுறைக்கு தெரியாது .தெரியவருமோ என்பதும் நிச்சயமில்லை.வண்ணை ஆனந்தனும் சபாலிங்கமும் புஸ்பராஜாவும் இறந்துவிட்டார்கள்.புஸ்பராஜா மட்டும் அவர் எழுதிய புத்தகம் மூலமாக இன்னமும் பல ஆண்டுகள் உயிர் வாழ்வார்.

புஸ்பராஜா ஒரு நாட்டுப்பற்றாளரா என்ற கேள்விக்கு விடையை காலம்தான் சொல்லவேண்டும்.

புஸ்பராஜா பற்றிய ஒரு கட்டுரையை அ. முத்துலிங்கம் அவர்கள் பதிவுகள் தளத்தில் எழுதியுள்ளார் .அந்த கருத்துடன் ஒன்றி அதை இங்கு மறு பதிப்பிடுகிறேன் .

நன்றி பதிவுகள் .திரு அ.முத்துலிங்கம் அவர்கள்.

இலக்கியம்!
சொந்த நாட்டுக்குப் போ!
அ.முத்துலிங்கம்

இறப்பதற்கு சில நாட்கள் முன்பு நான் சுந்தர ராமாசாமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 'இளையராஜா ஒரு மேதை. அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரைப் பற்றி எழுதுவேன்' என்று சொன்னார். கடைசி வரை அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். இளையராஜா பற்றி ஒன்றும் எழுதாமலே சுந்தர ராமசாமி இறந்துபோனார். சில விசயங்களை தள்ளிப்போடக் கூடாது; முக்கியமாக பாராட்டுகள். 2004ம் ஆண்டு எனக்கு மிகவும் மோசமான ஆண்டு. கோடைக்கால முடிவில் எனக்கு தீவிரமான ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. பதினாலு நாட்கள் படுத்த படுக்கையாக, அசைய முடியாமல் ஒரே இடத்தில் கிடந்தேன். அந்தச் சமயங்களில் எனக்குப் பக்கத்தில் இருந்தது ஒரேயொரு புத்தகம். சி.புஸ்பராஜா எழுதிய 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்.' கடுமையான மருந்துகள் உள்ளே எடுத்ததால் நித்திரையும், முழிப்புமாக என் காலம் கழிந்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும் நான் அந்தப் புத்தகத்தை நெற்றிக்கு மேலால் பிடித்து படித்தேன். நெஞ்சில் அது விரித்தபடி படுத்திருக்க நான் நித்திரையாகினேன். மீண்டும் எழும்பியதும் விட்ட இடத்திலிருந்து படித்தேன். இப்படி 14 நாட்கள் என் பக்கத்தில் உறுதுணையாக, நண்பனாக அந்தப் புத்தகம் இருந்தது. 631 பக்கங்களையும் இந்தக் காலகட்டத்தில் நான் படித்து முடித்தேன். சில அத்தியாயங்களை இரு தடவை; சில பத்திகளை இரு தடவை; சில வசனங்களை இரு தடவை; சில வார்த்தைகளை இரு தடவை. என்னை அது மிகவும் பாதித்தது.

புஸ்பராஜாவை எனக்கு முன்பின் தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. எப்படியும் அவரைத் தொடர்புகொண்டு பாராட்டவேண்டும் என்று நினைத்தேன். ஒருவருக்கும் அவருடைய முகவரியோ, தொலைபேசி இலக்கமோ தெரியவில்லை. அப்படியே காலம் கடந்துபோய் விட்டது. இனிமேல் நான் எவ்வளவுதான் முயன்றாலும் அது முடியாத காரியம். ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் அதை உடனேயே செய்யவேண்டும். தூற்றுவதாயிருந்தால் தள்ளிப் போடலாம், பாதகமேயில்லை. சுந்தர ராமசாமிக்கு நடந்ததுபோலவே எனக்கும் நடந்தது. மரணம் முந்திக்கொண்டு விட்டது.

சில நண்பர்கள் சொன்னார்கள் புஸ்பராஜா எழுதிய நூலில் பல சரித்திரப் பிழைகளும், தகவல் பிழைகளும் இருக்கின்றன என்று. இருக்கலாம். ஆனால் அவரே சொன்னதுபோல நான் இதை ஒரு ஆய்வு நூலாகப் பார்க்கவில்லை. சரித்திர மாணவர்களுக்கு பயன்படும் முதல் ஆவணமாகவே பார்த்தேன். இனிமேல் வரும் பதிப்புகளில் தகவல் பிழைகளை திருத்திக் கொள்ளலாம். நான் மெய்யாகவே அனுபவித்தது அவருடைய இயல்பான நடையையும், இலக்கிய மொழியையும், மருத்துவர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் புஸ்பராஜா பிரான்ஸில் இருந்து புறப்பட்டு இந்தியா போனார். மரணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கலாம் என்று நினைத்தார். அவர் செய்து முடிப்பதற்கு இந்தப் பூமியில் இன்னும் சில இலக்கிய வேலைகள் இருந்தன. சிறிது அவகாசம்தான் தேவைப் பட்டது. இந்தியாவில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் 'ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் சொந்த நாட்டுக்கு போங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். 56 வருடங்களாக சொந்த நாடு ஒன்றைத் தேடித் திரிந்தவருக்கு இந்த வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும். மறுபடியும் பிரான்ஸ் தேசம் வந்தார். அங்கேயே உயிரை விட்டார்.

The View from Castle Rock ல் அலிஸ் மன்றோ சொன்னது நினைவுக்கு வருகிறது. 'It cannot be my home. It can be nothing to me but the land where I will die.' புகுந்த நாடு ஒரு போதும் சொந்த நாடாக மாறமுடியாது. நீ இறக்கப் போகும் நாடாக வேண்டுமானால் இருக்கலாம்.

கனடாவில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கற்சுறா அவருடன் தான் இறுதி நாட்களில் தொலைபேசியில் உரையாடியதை நினைவு கூர்ந்தார். புஸ்பராஜா சொன்னார், 'நண்பரே, மரணம் பின் வாசல் வழியாக வரும் என்று நினைத்தேன். அது முன் வாசல் வழியாக வந்துவிட்டது.' புஸ்பராஜா வாசல் கதவில் மரணத்தை ஒரு சில மாதம் தடுத்துவைக்க நினைத்தார். 'நான் எழுத நினைத்ததை முடிக்க எனக்கு ஒன்பது மாதங்கள் அவகாசமே போதும்' என்று வருந்தினார். அப்படி வருத்தப்படுவதற்கு அவசியமே இல்லை.

திருவள்ளுவர் எத்தனை நூல்கள் எழுதினார். ஒன்றுதான், அது திருக்குறள். கணியன் பூங்குன்றனார் 1800 வருடங்களுக்கு முன்னர் படைத்த ஒரு கவிதைக்காக இன்றுவரை போற்றப்படுகிறார். ஹார்ப்பர் லீ தன் வாழ்நாளில் எழுதிய புகழ் பெற்ற ஒரேயொரு நாவல் To Kill a Mocking Bird. பிரிட்டிஷ் இளம் பெண் Emily Bronte படைத்த வாழ்நாள் சாதனை இலக்கியம் Wuthering Heights.

இந்த வகையில் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது.

11 comments:

-/பெயரிலி. said...

/இந்த வகையில் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது./

இவ்வரிகளைப் பதிவுகளிலே கண்டபோது, எங்கே போய் முட்டிக்கொள்வதென்று தெரியாமலிருந்தது. "ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது" போன்ற வரிகள் ஒரு நினைவுக்குறிப்பினை அழகாக முடிக்க உதவலாம். ஆனால், அதற்கப்பால் அர்த்தமில்லாத அல்லது அநர்த்தமான கருத்தினைத்தான் தரும். ஒரு நூலும் ஒரு வரலாறும் போதுமென்ற தேசமிருப்பின், பசாமின் பண்டைய இந்தியாவே போதுமானது ;-)

டிசே தமிழன் said...

/இவ்வரிகளைப் பதிவுகளிலே கண்டபோது, எங்கே போய் முட்டிக்கொள்வதென்று தெரியாமலிருந்தது./
பெயரிலி எனக்கும் இதுதான் பதிவுகளில் முதன்முதலில் வாசித்தபோது தோன்றியது. புஸ்பராஜாவின் நினைவுக்கூட்டம் நடந்தபோதுகூட, எனக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அ.முத்துலிங்கம் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதை கண்டதாய் நினைவினில்லை. எழுதும்போதுதான் எல்லாப் பிரச்சினையும் :-).

KARTHIKRAMAS said...

நல்லவேளை, முத்துலிங்கம் மருத்துவராக இல்லையே...சந்தோசப்படுங்கள். ஒரு கைக்கு ஒருவிரலே போதுமானது, மற்ற நாலையும் வெட்டியிருப்பார் ;-). எழுதலாம் என்று நினைத்ததை இரண்டு ஆக்களும் ஏற்கனவே கதைச்சுகிட்டு இருக்கின்றீர்

Thangamani said...

//"ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது" போன்ற வரிகள் ஒரு நினைவுக்குறிப்பினை அழகாக முடிக்க உதவலாம். ஆனால், அதற்கப்பால் அர்த்தமில்லாத அல்லது அநர்த்தமான கருத்தினைத்தான் தரும்.//

Right!

theevu said...

//எழுதும்போதுதான் எல்லாப் பிரச்சினையும் :-).//

:)

கருத்துக்கு நன்றி தங்கமணி பெயரிலி டீசே கார்த்திக்


கார்த்திக்

//இரண்டு ஆக்களும் ஏற்கனவே கதைச்சுகிட்டு இருக்கின்றீர் //


.இரண்டு (பேரும்) ஆக்களும் ஏற்கனவே கதைச்சுகொண்டு(கிட்டு) இருக்கிறியள்(இருக்கின்றீர் )
இப்படி வரும்

-theevu-

Anonymous said...

வணக்கம்,

நான் இங்கு எழுதுவது அ.முத்துலிங்கத்திக்கு வக்காலத்திற்கு புகழ் பாட வரவில்லை. ஊர் நாய்கள் போல் குலைப்பவர்களுக்கும் முட்டையில் மயிர் பிடுங்குபவர்களுக்கும் சில வேண்டுகோள்

1. /இவ்வரிகளைப் பதிவுகளிலே கண்டபோது, எங்கே போய் முட்டிக்கொள்வதென்று தெரியாமலிருந்தது./

நண்பரே நிங்கள் நிட்சயமாக சி.புஸ்பராஜா எழுதிய புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியிருக்க மாட்டீர்கள் அதுமாத்திரம் இல்லை
நிட்சயமாக படித்திருக்க மாட்டீர்கள்.

நண்பரே நீங்கள் இதுவரை தமிழ் எழுத்துக்கு ஆற்றிய பங்கு ஏன்ன ?

இதுவரை நீங்கள் பாராட்டி எழுதிய கட்டுரைகள் ? எழுத்தாளர்கள் ?

அ.முத்துலிங்கத்திக்கு உங்களுடைய கருத்தை எழுத்து மூலம் தெரிவிக்க முயற்ச்சி செய்ததுண்டா ?

2. புஸ்பராஜாவின் நினைவுக்கூட்டம் நடந்தபோதுகூட, எனக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அ.முத்துலிங்கம் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதை கண்டதாய் நினைவினில்லை.


ஒருவர் தனது உணர்ச்சியை உங்கள் எதிர்பார்புப்படி காண்பிப்பதற்கு ஒருவருடைய உணர்ச்சி தமிழ் சினிமாவோ, மேடைப் பேச்சோ, அல்லது பட்டிமன்றமோ இல்லை.


தமிழர்களின் இந்த நிலை தமிழர்கள் தொடர்ந்தும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருப்பது போல் தோன்றுகின்றது.

கட்டுரையை மீள்பிரசுரம் செய்த தீவுக்கு எனது நன்றிகள்

அன்புடன் உதயணன்

டிசே தமிழன் said...

ஊர் நாயாகவும் (ஏன் மிச்ச நாய்கள் குரைக்காதா என்ன?)முட்டையில் மயிர் பிடுங்கிக்கொண்டு இன்னமும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருக்கும் தமிழர்கள் சார்பாக நானும் சில விடயங்களை நல்ல மனுசராக நாகரிகமாய்க் கதைத்துக்கொண்டும், முட்டையில் மயிர்பிடுங்காத வேலை செய்யாதும் தெளிவாக இருக்கின்ற உதயணனுக்கு சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு....ஆமேன்!

அண்ணரின் முதற்கேள்வியைப் பாருங்கள். எவ்வளவு தெளிவாக எங்களை அறிந்து வைத்திருக்கின்றார்....
/நண்பரே நிங்கள் நிட்சயமாக சி.புஸ்பராஜா எழுதிய புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியிருக்க மாட்டீர்கள் அதுமாத்திரம் இல்லை
நிட்சயமாக படித்திருக்க மாட்டீர்கள்/

ஓமண்ணை புத்தகம் வாங்கவுமில்லை ஒரு மண்ணாங்கட்டியும் வாசிக்கவில்லை. சந்தோசமா இப்ப உங்களுக்கு...

...
/நண்பரே நீங்கள் இதுவரை தமிழ் எழுத்துக்கு ஆற்றிய பங்கு ஏன்ன ?

இதுவரை நீங்கள் பாராட்டி எழுதிய கட்டுரைகள் ? எழுத்தாளர்கள் ?

அ.முத்துலிங்கத்திக்கு உங்களுடைய கருத்தை எழுத்து மூலம் தெரிவிக்க முயற்ச்சி செய்ததுண்டா?/

ஆகா என்ன அற்புதமான கேள்விகள் அண்ணை. கேள்வியின் திறத்தால் கொஞ்சநேரம் குரைத்துக்கொண்டிருப்பதையே நிறுத்த வேண்டியதாயிற்று. ஏன் ஒரு புத்தகத்தைப் பற்றி கருத்துச் சொல்லவேண்டும் என்றால் நான் இன்ன இன்ன நூல்களை வாசித்திருக்கின்றேன்...ஆகவேஎனக்கு இந்த நூலைப் பற்றிக்குரைக்கும் தகுதி இருக்கின்றதென்று உங்களிடன் சான்றிதழ் வாங்கியா நாங்கள் எல்லாவற்றிற்கும் குரைக்கமுடியும் (ச்சீ உங்கடை மொழியில் கதைக்கமுடியும்?)?
...
/ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது./
என்று அ.மு எழுதிவிட்டதால், ஒரு நூலைப் பற்றிக் கதைக்க அந்த ஒரு நூல போதுமானதே என்று நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாதா என்ன?
...
/ஒருவர் தனது உணர்ச்சியை உங்கள் எதிர்பார்புப்படி காண்பிப்பதற்கு ஒருவருடைய உணர்ச்சி தமிழ் சினிமாவோ, மேடைப் பேச்சோ, அல்லது பட்டிமன்றமோ இல்லை. /
அண்ணை நீங்கள் இந்தளவுக்கு 'அப்பாவியாகவும்', நகைச்சுவை வறட்சியுடையவராகவும் இருப்பதைப் பார்க்க, நீங்கள் உண்மையிலேயே அ.முவின் எள்ளல் தெறிக்கும் படைப்புக்களை வாசித்திருக்கின்றீர்களா என்று எல்லாம் நான் உங்களைப் பார்த்து திரும்பிக் குரைக்கமாட்டேன்.
....
ஓமண்ணை, நாங்கள் குரைத்துக்கொண்டேயிருக்கிறோம். நீங்கள் அ.முவை வாசித்துக்கொண்டும், கருத்துச் சொல்லிக்கொண்டோ/அவருக்குஎழுதிக்கொண்டோ இருங்கோ....'ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது' போல, ஒரு விசுவாசமான விசிறி ஒரு அ.முவுக்குப் போதுந்தானே....குரைக்கின்ற நமக்கெல்லாம் படைப்புக்கும் படைப்பாளிகளுக்கும் இடையில் என்ன வேலை சொல்லுங்கோ?

Anonymous said...

சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். படைப்புக்கும் படைப்பாளிகளுக்கும் இடையில் நண்பரின் ஆக்கபூர்வமான பணி தொடரட்டும்.
குரைக்கின்ற நாய் கடிக்கும் போல் இருக்கின்றது. பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் விடைபெறுகின்றேன். உதயணன்

டிசே தமிழன் said...

அண்ணை, நாய்களுக்கு கல்லெறிந்தால் குரைக்கவும் கடிக்கவும்தானே செய்யும். அதுதானே நாய்களின் பிழைப்பு :-).
....
ஏற்கனவே சில ஆக்கள் வந்தவுடனேயே திருப்பிக் கடித்துத் துரத்துகின்றோம் என்ற நல்ல பெயரும் இருப்பதால் நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை எழுதுங்கோ...ஓடிப்போய்விடாதையுங்கோ. ஏன் எங்களுக்கு உந்த கோதாரிபிடிச்ச பட்டங்கள் எல்லாம் தொடர்ந்து வரவேண்டும்.
....
ஆனால், ஒருவரைப் பற்றி நாலு வரி 'பாராட்டமுன்னர்' அவர்கள் முன்பு என்ன எல்லாம் குரைத்திருக்கின்றார்கள் என்று அவர்களின் பதிவுகளை பார்த்துவிட்டாவது கதையுங்கோ...அதுதான் நீங்கள் கதைப்பதற்கு நியாயம் சேர்ப்பதாயும் இருக்கும்...மற்ற வாசிக்கிற ஆக்களும் நீங்கள் எழுதுவதை நம்பக்கூடியதாயும் இருக்குமாம்.

-/பெயரிலி. said...

/இந்த வகையில் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது./

'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலை நான் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவில்லையென்றே கொள்வோம். ஆனால், மேற்கூறிய பொதுப்படையான கருத்தினை விமர்சிக்க 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' இனை மட்டுமல்ல அதற்கான எதிர்நிலைப்பாடுள்ள ஒரு நூலையுங்கூட காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கவேண்டியதில்லையென்பதே என் கருத்து. இது நூலைப் பற்றிய விமர்சனமில்லை; நூலுக்கு வந்த விமர்சனத்திலே காணப்படும் அபத்தம் குறித்த விமர்சனம்.

முத்துலிங்கத்துக்குக் கடிதம் எழுதி இதைச் சுட்டவேண்டிய அவசியமிருப்பின், பதிவுகளிலேயே செய்திருக்கலாம். ஆனால், இதற்கு அஞ்சல்முகவரி தேடி ஆசிரியருக்குக் கடிதம் எழுதுமளவுக்கு முக்கியமான தேவை எனக்கு இருப்பதாகப் படவில்லை. வலைப்பதிவு பின்னூட்டத்தினை இலகுவாக்குகின்றது. அவ்வளவுதான்.

உதயணன் said...

பெயரிலின் கருத்தை நான் முற்றக ஏற்றுக்கொள்கிறேன். வலைக்கு நான் புதியவன். பாராட்டுக்களுக்கு பதில் குறைகூறும் நிலமைகளை அதிகம் தமிழர்களிடம் சந்திக்க நேர்ந்ததால் ஏற்பட்ட ஒரு உத்வேகத்தில் எனது கருத்து அமைந்திருந்தது. தவறுகள் இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
ஆக்கபூர்வமான எந்த தமிழ் பணிக்கும் என்னுடய பாராட்டுக்கள்