இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்கும்
பெரியண்ணா உதவலாம்-
இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்கும்'
சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளேடான `இந்து' வுக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ள கோஹண, பெரியண்ணன் ஆகவோ, நெருங்கிய அயலவராகவோ 2 ஆயிரம் ஆண்டு கால நண்பனாகவோ பாரதம் இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியுமென கூறியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் முக்கியமான பங்களிப்பை மிகப்பக்கத்திலுள்ள பெரிய நாடென்ற வகையில் இந்தியா வழங்கவேண்டும் என்று வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கும் அரசாங்க சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகம் பாலித கோஹண, தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்குமென்ற பழையதோர் உவமையையும் கூறி வலுச்சேர்த்திருக்கிறார்.
சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளேடான `இந்து' வுக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ள கோஹண, பெரியண்ணன் ஆகவோ, நெருங்கிய அயலவராகவோ 2 ஆயிரம் ஆண்டு கால நண்பனாகவோ பாரதம் இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியுமென கூறியுள்ளார்.
பாலித கோஹணவிடம் `இந்து' எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கு தரப்படுகின்றன.
கேள்வி: இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெறுவதற்கு விடுதலைப் புலிகள் ஆட்சேபனை தெரிவிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
பாலித : என்னால் உண்மையாக அவர்களது எதிர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் தேசங்களை அடிப்படையாக வைத்து அல்லாமல் தனி நபர்கள் என்ற அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.
இவர்கள் ஸ்கன்டினேவிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நோர்வேயின் அதிகாரத்தின் கீழேயேயுள்ளனர்.
இது யுனிசெவ் போன்றது. அமெரிக்கா விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளது. இதற்காக இலங்கைக்கான யுனிசெவ் தலைவராகவுள்ள அமெரிக்கர் விடுதலைப் புலிகளால் ஏற்றுக் கொள்ளப்படாதவரா, இது விடுதலைப் புலிகள் தாங்கள் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளாமல் இருப்பதற்காக கூறும் ஒரு காரணமே.
கேள்வி: இலங்கையில் தற்போது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள வன்முறைகள் குறித்த உங்களது மதிப்பீடுகள் என்ன?
பதில் : விடுதலைப் புலிகள் கிளைமோர் குண்டுகளை வெடிக்காத நாளோ, கைக்குண்டு வீச்சினை மேற்கொள்ளாத நாளோ துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளாத நாளோ கிடையாது. பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்தின் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை உலகிலேயே மிகவும் கொடூரமான காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கையாகும். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக வன்முறைகள் தொடர்கின்றன. சமாதானம் ஏற்படவேண்டுமெனில், வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என நாங்கள் எப்போதும் தெரிவித்து வந்துள்ளோம்.
அரசியல் இலக்குகளை எய்துவதற்கு வன்முறை ஒரு வழிமுறையல்ல என்பதை விடுதலைப் புலிகள் உணரவேண்டும். 1950, 1960 களிலிருந்து உலகம் மாறிவிட்டது. அரசியல் இலக்குகளை எய்துவதற்காக வழிமுறையாக பயங்கரவாதத்தை அது சகித்துக் கொள்வதில்லை.
கேள்வி: விடுதலைப் புலிகள் தங்களுக்கும் இந்த வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளதுடன், அரசாங்கமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?
பாலித: இது ஆழமற்றதாக தென்படுகின்றது. இவை அனைத்தும் ஒரு முறைக்குள் பொருந்துகின்றன. விடுதலைப் புலிகளே இவை அனைத்திற்கும் காரணம். ராஜீவ் காந்தியை கொலை செய்து விட்டு அதனை மறுத்ததை நீங்கள் மறக்கக் கூடாது. அவர்கள் இதனை மறுத்த போதிலும் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய உயர் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மிகக் கொடூரமான படுகொலைகளில் ஈடுபட்ட பின்னர் அதனை நிராகரித்ததை மறுக்க முடியாது.
இலங்கையில் அதிநவீன கிளைமோரை தயாரிக்கும் தொழில் நுட்பம் விடுதலைப் புலிகளிடம் மாத்திரம் உள்ளதை சொல்ல வேண்டும். வேறு எவரிற்கும் இந்த திறமை கிடையாது.
கேள்வி: இதற்கான ஆதாரங்கள் உள்ளதா அல்லது இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?
பாலித: உலகின் எப்பகுதியிலும் 100 வீத ஆதாரம் கிடைக்கப் போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உறுதிப்படுத்த முடியாத ஆதாரங்களிலேயே நீங்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இவற்றிற்கு காரணம் விடுதலைப் புலிகள் என இலங்கை அரசாங்கம் மாத்திரம் குற்றம் சாட்டவில்லை. சொந்த நலன்களற்ற சர்வதேச அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.
கேள்வி : அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப்புள்ளி என்ன?
பாலித : எந்த இடத்திலும் ஆரம்பிக்கலாம் என நாங்கள் நினைக்கின்றோம். எனினும் குறிப்பிடத்தக்க விடயங்களே ஆரம்பப் புள்ளியாக அமைவது நல்லது.
மனிதாபிமான, அபிவிருத்தி விடயங்களும் இடம்பெறலாம். இவை அனைத்தும் பேச்சுவார்த்தையின் பொருளாக அமையலாம். எனினும், விடுதலைப் புலிகள் இது குறித்து பேசத் தயாராகவில்லை. நாங்கள் வேறு விடயங்கள் குறித்துப் பேசலாம். இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணி, கிழக்கிலிருந்து போராளிகளை வடக்கிற்கு கொண்டு செல்வது.
கேள்வி: ஆக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே முக்கியமானது என்கிறீர்களா?
பாலித : பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே முக்கியமானது. இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்தும் பேசுவது முக்கியமானது. அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளது.
கேள்வி : இந்தியா இலங்கை விவகாரத்தில் மேலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற கருத்துகள் இந்தியாவிலும், இலங்கையிலும் முன் வைக்கப்படுகின்றன. உங்களது கருத்து என்ன?
பாலித : இந்தியா எங்களது நெருங்கிய அயல்நாடு. இந்தியா ஒரு பாரிய அயல்நாடு. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு முறையும் தும்மல் வரும் போது இலங்கைக்கு சளி பிடிக்கும். இந்தியா ஆற்ற வேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது. அது ஒரு மூத்த சகோதரனின் பங்களிப்பாக இருக்கலாம். நெருங்கிய அயல்நாட்டின் பங்களிப்பாக இருக்கலாம். 200 வருட கால நண்பனின் பங்களிப்பாகவும் இருக்கலாம். இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடு என்ற வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்பாற்றும் என கருதுகின்றேன்.
கேள்வி : ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விடுதலைப் புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்திருந்தார். எந்தக் கட்டத்தில் இது சாத்தியம் எனக் கருதுகின்றீர்கள்?
பாலித: தனிப்பட்ட ரீதியில் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு வரச் செய்ய முடியுமானால் அது அவர்களை உள்ளடக்குவதாக அமையும். விடுதலைப் புலிகள் இல்லாத எந்தத் தீர்வும் இறுதியில் சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.
கேள்வி : ஆக, நீங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்புகின்றார்கள் என்ற பதிலுக்கு காத்திருக்கின்றீர்கள்?
பாலித : அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு வரச் செய்வதற்கு எம்மாலான அனைத்தையும் செய்வோம். இதுவே அரசாங்கத்தின் விருப்பமாகும். இந்த நாட்டிற்கு இனியும் வன்முறைகள் அவசியமில்லை. இரு தரப்பும் நீதியான தீர்விற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே அவசியம்.
கேள்வி: இராணுவ தளபதி மீதான படுகெலை முயற்சிக்கு பின்னர் அரசாங்கம் இனங் காணப்பட்ட தாக்குதல்கள் மீது தற்பாதுகாப்பு தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டது? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பாலித : ஒரு இலக்கு இரணைமடுவில் உள்ள விடுதலைப் புலிகளின் சட்ட விரோத விமான ஓடு பாதை, சர்வதேச சிவில் விமான சேவை விதிமுறைகளின் படி அரசாங்கம் சில சர்வதேச நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி சட்டவிரோத ஓடு பாதைகளுக்கு அனுமதி கிடையாது. சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம் அதனை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
இதேபோல இலங்கையில் எவராவது அரசாங்க அனுமதியின்றி விமான ஓடுபாதையை அமைக்க முயன்றால் அதனை அழிப்போம்.
இது தவிர பிராந்திய பாதுகாப்பு விவகாரமும் உள்ளது. விமான ஓடுபாதையொன்று பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தியா இந்த அமைப்பை பயங்கர இயக்கமாக அங்கீகரித்துள்ளது. இந்த அமைப்பு இலங்கைக்கு மாத்திரமல்ல பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், அயல் நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது.
கேள்வி : இலங்கையிலிருந்து அகதிகள் வருவது இன்னுமொரு பிரச்சினை. இதனை எவ்வாறு உணர்கிறீர்கள்?
பாலித : அச்சுறுத்தப்பட்ட ஏழை மக்கள் தஞ்சமடைய முயல்கின்றனர். பாக்கு நீரிணையே அதுவாகவுள்ளது. அகதிகள் இந்தியாவிற்கு செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாங்கள் யு.என்.எச்.சி.ஆருடனும் பேசியுள்ளோம்.
இவ்வாறான அச்சுறுத்தலிற்கு அப்பால் சில அழுத்தங்களையும் அவதானித்துள்ளோம். அரசியல் ரீதியாக சாதகமான விடயம் என்பதால் தமிழ் நாட்டிற்கு அகதிகள் செல்வதை விடுதலைப் புலிகள் விரும்பக்கூடும்.
திருகோணமலையிலிருந்து மன்னாரிற்கு அங்கிருந்து ஏன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள விரும்புகின்றார்கள் என்பது புரியவில்லை. இதைவிட தென்பகுதிக்கோ அல்லது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கோ செல்லலாம் இது எனக்கு புரியவில்லை. இதன் பின்னால் ஏதோவுள்ளது.
thinakkural
1 comments:
என்ன பாடு பட்டாவது இந்தியாவை இன்னுமொருதடவை இதுக்குள்ள இழுத்துவிடுவம் என்றுதான் பாக்கினம், சரிப்பட்டு வருது இல்ல. இப்ப சண்டைபிடிக்க இலங்கையின் பொருளாதாரம் சரிப்பட்டு வராது அதுதான் அதை இந்தியாவின் தலையில் கொஞ்சகாலம் கட்டிவிடுவம் என்று பாக்கினம், பிறகுதேவை என்றால் புலிக்கு ஆயுதம் கொடுத்து இந்தியாவை அடிச்சு துரத்தலாம் என்று ஜேஆரின் பழைய சிந்தனையில் இருக்கினம். இந்தியாவா கொக்கா.
Post a Comment