Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, February 22, 2007

'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள்


ஐந்தாண்டு நிறைவையொட்டி புலிகள் வெளியிட்ட அறிக்கை :தமிழ் வடிவம்

'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள்
[வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 03:31 ஈழம்] [புதினம் நிருபர்]
"பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." என்று போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


அந்த அறிக்கையின் முழு விபரம்:றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவரி 22, 2007 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தினுள் நுழைந்துகொண்டனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அப்போதைய சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

இந்த ஒப்பந்தமானது தற்போது எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும், இலங்கைத் தீவில் சமாதானத்திற்கான தேடலிலும், இனப்பிரச்சினையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை நோக்கிய வரலாற்றுப் பயணத்திலும் இது ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தமானது சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்டு தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட, தீவின் ஏனைய சமூகத்தவரை ஒடுக்குவதற்குத் துணைபுரிந்த இலங்கையின் பெரும்பான்மையினரது அரசியலமைப்பினது எல்லைகளைக் கடந்தே போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. இந்த ஒப்பந்தமானது தமிழீழ நடைமுறை யதார்த்த அரசினது இருப்பினை அங்கீகரித்துள்ளது.

இங்கு நடைமுறை யதார்த்த அரசு எனும் போது அது, தனித்துவமான மக்கள், பாதுகாப்புப் படை, காவல்துறை, நீதித்துறை, சிவில் நிர்வாகம் என்பவற்றுடன் மக்களைச் சிறந்தவகையில் நல்வழியில் ஆளுவதற்கான ஏனைய அனைத்து அம்சங்கள், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக்கொண்ட தமிழர் தாயகத்தின் இருப்பினைப் பிரதிபலிக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தன்னகத்தே கொண்டு, ஓர் அரசுடன் உடன்பாட்டினை எட்டும் திறன் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலுள்ள படைவலுச் சமநிலையினை போர் நிறுத்த ஒப்பந்தமானது அங்கீகரித்துள்ளதுடன், அது படை வலுச் சமநிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.

இலங்கைத் தீவு பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாள் முதல் தொடர்ச்சியாக வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தமிழர்கள் அவர்களது தாயகத்திலேயே முகம்கொடுத்து வந்தனர்.
சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து முதல் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் நீதிக்கான தொடர்ச்சியான அமைதிவழிப் போராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவத்தின் துணைகொண்டு ஒடுக்கியது. இதன் காரணமாக தமிழர்களது அமைதிவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டம் மற்றும் ஆயுதந் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் என்பன இடம்பெற்ற காலப்பகுதியில், அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த சிறிலங்காவினது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தரப்பினருக்கிடையே படைவலுச் சமநிலை காணப்படாதமையினாலும், சர்வதேச ஈடுபாடு இல்லாதமையினாலும் முன்னர் இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களும் தோல்வியில் முடிந்ததோடு, சிறிலங்கா அரசாங்கம் எட்டப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் மிகவும் வஞ்சகத்தனமாக ஏமாற்றப்பட்டனர்.

இவ்வாறாக அமைதி முயற்சிகள் தோற்றுப்போன கசப்பான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. இம்முறை, நோர்வேயினது அனுசரணையும், சர்வதேச சமூகத்தின் தீவிரமான ஆதரவும், பங்களிப்பும் தமிழ் மக்களுக்கு அமைதி முயற்சிகளில் முதற்தடவையாக நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால் இன்று, வருந்தத்தகு வகையில், சமாதான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தினது ஈடுபாடு உண்மையானதாகவோ ஆக்கபூர்வமானதாகவோ காணப்படவில்லை. இராணுவ வழிமுறையில் நகர்ந்து செல்லும் சிறிலங்கா அரசாங்கம் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ, ஆக்கபூர்வமாக எதிர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ சர்வதேச சமூகம் விரும்பமின்றிச் செயற்படுவதே போர் நிறுத்த ஒப்பந்தத்தினைப் பலமிழக்கச் செய்துள்ளது.

தரையிலும் வானிலும் கடலிலுமென சிறிலங்காவினது முப்படைகளும் மேற்கொண்டுவரும் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் மத்தியிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் போதிய பொறுமை காத்து வந்துள்ளனர்.

இக்காலப் பகுதியில் நாம் எமது பல போராளிகளை இழந்துள்ளோம். சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் மற்றும் பெருந்தொகையான தமிழர்கள் காணாமற்போகிறார்கள்.

ஆனால், அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்கின்ற போதும், சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த வகையான நடவடிக்கைகளையும் எடுக்காது நீதியற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தண்டனை வழங்கும் வகையிலமையும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.


பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு சமதரப்பு என்ற யதார்த்தத்தினை இது சிதைப்பதோடு சமாதான முன்னெடுப்புக்களையும் பாதிப்பதாக அமைகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத்தின் இதுபோன்ற நிலைப்பாடு வலுப்பெறுமிடத்து, தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அதிக கடும்போக்கைக் கைக்கொள்வதற்கே அது வழிவகுக்கும்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் கடுமையான முறையில் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுகின்ற போதும் பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் போதும் சர்வதேச சமூகமானது நீதியின்பால் நின்று செயற்பட்டு, அவற்றைத் தடுத்துநிறுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்காதுபோனால், அது தமிழர் தாயகப் பகுதியில் ஒர் போர்ச்சூழல் ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.

சர்வதேசத்தினது பங்குபற்றலுடன் இடம்பெற்ற சமாதான முன்னெடுப்புக்களும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளமை தமிழ் மக்களைச் சினங்கொள்ள வைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தமும் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்களும், ஏனைய ஒப்பந்தங்களைப் போலவும் பேச்சுக்களைப்போலவும் தற்போது தோல்வியடைந்திருப்பதுதான் தமிழ் மக்களுக்குக் கசப்பான ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதோர் புறநிலையில்தான் தமிழர் தேசத்தில் இயல்புநிலையினை ஏற்படுத்தும் வகையில், போர் நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள்.

ஆறு வருடங்களின் முன்னர் டிசம்பர் 2000 ஆம் ஆண்டில் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 24, 2001 இல் மீண்டும் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார்கள்.

நோர்வேயின் முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு மேற்குறித்த இந்த அறிவிப்பே வழிவகுத்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகைமையை முடிவுக்கு கொண்டுவந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தி பேச்சுகளுக்கான உகந்த புறநிலையைத் தோற்றுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோசமான போரின் காரணமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் மனிதநேய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை அனைத்து சுற்று அமைதிப் பேச்சுகளிலும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பும் இராணுவக் கெடுபிடிகளும் நீங்காது அமைதிப் பேச்சுகளுக்கான சாதகமான உகந்த புறநிலை ஏற்படமுடியாது என்பதை நேரடி சமாதானப் பேச்சுகளில் வலியுறுத்தினோம்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இடம்பெற்ற அனைத்துச் சுற்றுப் பேச்சுக்களின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முழுமையான ஈடுபாட்டுடன் அவற்றில் பங்கெடுத்தது.

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கேற்ப தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், தரப்பினர் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுக்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
எவ்வாறிருப்பினும் இவற்றை மதித்து நடப்பதற்குத் தவறிய இலங்கை அரசாங்கம், நிலமையினை மேலும் மோசமாக்கும் வகையில் செயற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழர் தாயகப் பகுதிகளில் இயல்புநிலையினை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை இரண்டு தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அது ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறி, பொதுமக்கள் வாழிடங்களை இன்னமும் ஆக்கிரமித்துநிற்கிறது.

ஓவ்வொரு கட்டப் பேச்சுக்களின்போதும், தமிழர் தாயகப் பகுதியில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினோம். இது தொடர்பில் தனக்குள்ள கடப்பாடுகளைப் புறந்தள்ளிய இலங்கை அரசாங்கம் காலங் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதேநேரம் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவர்களின் நிலமை மோசமாகிச் சென்றது.

நிலமையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசாங்கம் தான் மதித்துச் செயற்படவேண்டிய கடப்பாடுடைய ஒப்பந்த விதிகளை மீறி, துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துத் துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களை குறிப்பிடதொரு கால வரையறைக்குள் களைந்துவிட வேண்டுமென ஒப்பந்தவிதி 1.8 கூறுகிறது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் துணை இராணுவக் குழுக்களின் இருப்பினை சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினது அவதானிப்புகள் உறுதிப்படுத்துவதோடு 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரச திணைக்கள அறிக்கையும் இந்த உண்மையினை ஏற்றுக்கொள்கிறது.

சிறிலங்காவிற்குத் தகவல் திரட்டும் ஒரு நடவடிக்கையாக விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்புத் தூதுவர் சிறிலங்கா இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் இணைந்து ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் ஆட்சேர்பில் ஈடுபடுவதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2002 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் நாங்கள் எட்டுமுறை பங்கெடுத்துள்ளோம்.

தமிழர் தாயகத்தில் அவசர மனிதநேய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு பல பிரேரணைகளும் கட்டமைப்புகளும் ஆரம்ப கட்டப் பேச்சுகளின் போது உருவாக்கப்பட்டன.

இவ்வாறாக முன்வைக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் உடன்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் அது தமிழர்களது வாழ்நிலையினை போதுமானளவு மேம்படுத்தியிருக்கும். இவற்றில் சில பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டபோதும் பின்னர் அவையனைத்துமே நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாக புறந்தள்ளப்பட்டதோடு சிறிலங்கா அரசியலமைப்பைக் காரணங்காட்டி அவை கைவிடப்பட்டன.


இதனைத் தொடர்ந்து தூய மனிதாபிமான அடிப்படையில், இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கு வடக்கு கிழக்குக்கான உடனடி புனர்வாழ்வுக்கான உப குழு (Subcommitee for Immediate Rehabilitation of North East- SIHRN) உருவாக்கப்பட்டது. இருப்பினும் இது சிறிலங்கா அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழ் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கு முகங்கொடுத்து அடுத்த சுற்றுப் பேச்சுகளுக்கான புறநிலையைத் தோற்றுவிக்கும் பொருட்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான (Interim Self Governing Authoriy ISGA) பிரேரணையைச் சமர்ப்பித்தோம்.

இவ்விடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான பிரேரணையின் அடிப்படையில் அமைதிப் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்பாத அன்றைய சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டும் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கான அடிப்படையாக ISGA இனை முன்னிறுத்தியும் போட்டியிட்ட 22 தமிழ் பிரதிநிதிகள் பெரும் வெற்றியடைந்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் ஐனநாயக வழிமுறையூடாக வெளிப்படுத்திய விருப்பினை நிராகரித்து ISGA தொடர்பில் பேச்சுகளை மேற்கொள்ள மறுத்தது.


இவ்வாறானதோர் புறநிலையில் டிசம்பர் 2005 ஆம் ஆண்டு இலங்கைத் தீவினை ஆழிப்பேரலை மிக மோசமாகத் தாக்கியது. தொடர்ந்து வந்த இனப்போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களே இலங்கைத்தீவில் ஆழிப்பேரலையினால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் எவ்வித உதவிகளுமின்றிய நிலையில் எமது இராணுவ சிவில் கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச உள்நாட்டு தொண்டர் அமைப்புகள் தமிழர் தாயகத்தில் மிகப்பெரியதோர் மனிதநேய நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாராட்டத்தக்க வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் எமது புலம்பெயர்ந்த மக்களின் உதவியே உடனடியாக பெரும் மனிதநேய நெருக்கடிக்கு முகங்கொடுக்கத் துணைநின்றது. ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் சர்வதேச உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில், இவ்வியற்கை அழிவு இடம்பெற்று ஆறு மாதங்களின் பின்னர் நோர்வே அரசின் அனுசரணையுடனும் சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகளின் உதவியுடனும் சுனாமிக்குப் பின்னான நடவடிக்கை முகாமைத்துவக் கட்டமைப்பு (Post Tsunami Operational Management Structure- PTOMS) உடன்படிக்கை எட்டப்பட்டது.

ஓர் மனிதநேய உதவிக்கான இக்கட்டமைப்பும் சிறிலங்கா அரசாங்கத்தால் அரசியலமைப்பைக் காரணங்காட்டி நிராகரிக்கப்பட்டது. சிறிலங்காவில் சட்ட பன்மைத்துவம் இன்மையினைக் காட்டுவதான இன்னொரு உதாரணமாக இது அமைகிறது. மனிதாபிமானம் மிக்க இந்த இயற்கை அனர்த்த முகாமைத்துவ விடயத்திற்கூட தமிழர்கள் நீதி பெறவுமில்லை, சமமாக நடத்தப்படவுமில்லை. இந்த நிலையில், ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர்களது பிரச்சினைகளைக் கையாள்வதற்கு மாற்று வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக சர்வதேச சமூகமோ, பாதிக்கப்பட்ட மக்களை நிர்க்கதியில் விட்டுவிட்டு வெளியேறியது.
இச் சூழமைவிற்தான் 2005 ஆம் ஆண்டு சிறிலங்காவின் தற்போதைய ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அதிகளவிலான சிங்கள வாக்குகளைப் பெற்று சிறிலங்காவின் ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்சவின் வரவுடன் தமிழர்களுக்கெதிரான நிழல் யுத்தம் முடுக்கிவிடப்பட்டது. தமிழர் தேசத்தின் இருண்ட பகுதி ஆரம்பமானது. கொடூரமான கொலைகள் மற்றும் காணாமற்போதல்களால் மக்கள் அச்சமடைந்தார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் காணாமற் போதல்களுக்கும் படுகொலைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் தமிழ்ப் பொதுமக்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் தொடரும் நிலையில் அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிகள் கொலைக்களங்களாக மாறிவிட்டன. குறித்த பகுதிகளில் வாழும் தமிழ்ப் பொதுமக்கள் இயல்புநிலையினை இழந்து அச்சத்தின் மத்தியில் தமது வாழ்க்கையினை ஓட்டுகிறார்கள்.
கொலைகள், காணாமற்போதல்கள், துன்புறுத்தல்கள் என்பவற்றுடன் சிறிலங்கா அரசாங்கமானது வகைதொகையற்ற விமானக் குண்டுத்தாக்குதல்களைத் தமிழர் தாயகப் பகுதிகளில் நடாத்தி வருகின்றது.

பிரித்தானிய காடியன் பத்திரிகையின் ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போல, சூடானிய அரசாங்கத்தினைப் போலவே இலங்கை அரசாங்கமும் மெருமெடுப்பிலான விமானக் குண்டுத்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் வாழிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் மீது விமானக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதானது, ஜெனீவா உடன்பாடு நான்கினது சரத்து 147 இன் அடிப்படையில் ஓர் போர் குற்றமாகும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.3 இற்கு முற்றிலும் முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல்களை நடாத்துவதோடு தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமித்து நிற்கிறது. இவ்வாறாக, புலிகளை வலிந்து போருக்கிழுக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டபோதும், புலிகள் தங்களால் இயன்ற பொறுமையினைக் காப்பதோடு, சில தற்காப்புத் தாக்குதல்களில் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

மோசமாகிச் செல்லும் இந்த நிலையில்தான் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுமையான அமுலாக்கம் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பேச்சுக்களின்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்த சிறிலங்கா அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களையும் களைவதாகக் கூறியது.

ஜெனீவா பேச்சுக்களின் போது அரச பேச்சுக்குழு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக, தமிழர் தாயகப் பகுதிகளில் மிகவும் மோசமான இராணுவ நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

தமிழ்மக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டார்கள், காணாமற்போனார்கள். சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவின் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையை (ICCPR:International Covenant on Civil and Political Rights) ஏற்றுக்கொண்டுள்ள நாடென்ற வகையில் இக்கொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவும் தவறியுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் இப்படுகொலைகள் காணாமற் போதல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் மற்றும் முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் கொபி அனான் ஆகியோரின் ஆழ்ந்த கரிசனைகளையும் கண்டனங்களையும் நினைவுபடுத்த நாம் விரும்புகின்றோம்.

மேலும் சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட அல்லைப்பிட்டிப் படுகொலைகளுக்கான சான்றுகள் தம்மிடமிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை மே மாதம் 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது கண்டன அறிக்கையில் (AI Index: ASA 37/014/2006 ) வெளிப்படுத்தியது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகள் குறித்து சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதானது, தமிழர்களது பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் நேர்மைத்தன்மை மற்றும் வினைத்திறன் தொடர்பில் கேள்வியினை எழுப்பியுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் மனிதத்திற்கெதிரான குற்றங்கள் அரங்கேறிக்கொண்டிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளோ, அதியுச்ச பொறுமையுடனிருந்தவாறு போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுமையான அமுலாக்கத்தை வலியுறுத்தினர். குறித்த இந்தச் சூழமைவில், நாம் சர்வதேச சமூகத்தின் அழைப்பை ஏற்று மீண்டும் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நோர்வேயினது அனுசரணையுடனும் சுவிஸ் அரசாங்கத்தினது ஏற்பாட்டுடனும் ஒக்ரோபர் 2006 இல் அரச தூதுக்குழுவுடன் பேச்சுகளை மேற்கொண்டோம். இப் பேச்சுகளில் நாம் எமது அதியுச்ச நெகிழ்வுப் போக்கையும் பொறுமையையும் வெளிப்படுத்தியிருந்தோம்.

யாழ். குடாநாட்டிற்கான ஒரே ஒரு தரைவழிப் பாதையான ஏ-9 பாதையினை மூடி, அங்கு பெரும் மனித அவலம் ஏற்படுவதற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதை நாங்கள் பேச்சுக்களின் போது சுட்டிக் காட்டினோம். அண்ணளவாக 50,000 ஆயுதப்படையினர் ஆக்கிரமித்து நிற்கும் குடாநாட்டுக்கான பாதை மூடப்பட்டதன் காரணமாக, அங்கு ஆறு இலட்சம் பொதுமக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையினுள் அடைக்கப்பட்டவரானார்கள்.

குறித்த இந்த நெடுஞ்சாலையினை திறக்க அரச தூதுக்குழுவினர் உடன்பட மறுத்தமையானது பேச்சுக்கள் தோல்வியில் முடிவதற்கு வழிவகுத்தது. இப்பாதை மூடப்பட்டிருப்பது புதிய "பேர்ளின் சுவரினைத்" தோற்றுவிக்கின்றது என நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.
மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான உரிமையை மீறுகின்ற நடவடிக்கையாக அமைந்த ஏ-9 சாலை மூடப்பட்டமை யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் மீறியுள்ளதோடு, அது பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் செல்வதையும் தடுக்கிறது.

குறித்ததொரு மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் செல்லவிடாமல் தடுப்பதானது சர்வதேச சட்டத்தினை (சரத்து 147) முற்றாக மீறும் செயல் என்பதோடு, தமிழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதை உறுதிப்படுத்தத் தவறியது.
ஜெனீவா உடன்பாடு நான்கின் சரத்துக்கள் 55 மற்றும் 59-63 ஆகியவற்றை முற்றாக மீறும் செயலாகும். நாட்டினது இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான ஓர் "முக்கிய நகர்வாக" கொழும்பினது இரண்டு அரசியல் கட்சிகளின் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டினைக் காட்டுவதற்கு ஜெனீவாவில் அரச தூதுக்குழுவினர் முனைந்தார்கள். தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலற்றுக் கிடக்கிறது. அத்துடன், இந்த செயலற்றுப்போகும் அரசியல் முறைமை சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைத்த நாள்முதல் அதனது மக்களுக்கு துன்பத்தையே விளைவித்து நிற்கிறது.

இன்றுடன் போர்நிறுத்த உடன்படிக்கை தனது ஐந்தாவது வருடத்தை அதாவது 1,826 ஆவது நாளைக் கடக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையின் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான சரத்து 2 பொதுமக்கள் மீதான சகல துன்புறுத்தல்களும் நீக்கப்பட்டு அவர்கள் மீளவும் தமது வாழிடங்களுக்கு திரும்புவதையும் வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் ஏனைய பொதுக் கட்டடங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்துகின்றது.

ஆனால், இன்றும் தமிழர் தாயகத்தில் மூன்றிலொரு மக்கள் வாழ்விடங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் அமைந்துள்ளது. 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரும் அதியுச்ச இராணுவ நலன்கள் என்ற போர்வையில் மக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து வலிந்து வெளியேற்றி தொடர்ந்தும் அவ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கின்றது.

இச்செயற்பாடானது பொதுமக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து வலிந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் ஜெனீவா உடன்படிக்கையின் இரண்டாவது மேலதிக இணைப்பின் 17 ஆவது சரத்தினை (Article 17 Geneva Conventions second Additional Protocol 2) மீறியுள்ளது.

மேலும் தரை வழிப் போருக்கான 1907 ஹேக் உடன்படிக்கையின் 46 ஆவது சரத்து (Article 46 paragraph 2 of the 1907 Hague Convention) பொது மக்களின் உடமைகளைப் பறிமுதல் செய்வதைத் தடுக்கிறது. இன்று சர்வதேச அமைதி உடன்படிக்கைகளுக்கான முன்னுதாரணங்களாக இருக்கும் கொசோவோ, பொஸ்னியா, புரூண்டி, ஜோர்ஜியா, மசிடோனியா போன்ற ஏனைய சர்வதேச அமைதி உடன்படிக்கைகள் இராணுவ நலன்களைக் காரணம் காட்டி இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பிச் செல்வதை மறுக்கவில்லை.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் தமிழர் தாயகத்தில், அரச படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித அவலம் எமது மக்களை வெறுப்பின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் மாத்திரம் தமிழர் தாயகத்தில் 1591 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு 674 பேர் காணாமற்போயுள்ளார்கள். உயர் பாதுகாப்பு வலயங்களைக் காரணங்காட்டி வெளியேற்றப்பட்ட 300,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைவிட அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் மாத்திரம் 210,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறானதோர் நெருக்கடியான கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் நடுநிலமைத் தன்மையாலும் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலாலுமே நீதியான நிலையான அமைதியை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்த முடியும். இந்த யதார்த்தத்திற்கு முரணாகவும் பக்கச்சார்புடனும் செயற்பட்டு தமிழர் தரப்பை மாத்திரம் ஓரங்கட்டி பலவீனப்படுத்த முனைவது, சமாதான முனைப்புக்களைச் சிதைப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களை அடக்கும் வகையிலமையும் சிங்கள அரசினது திட்டத்தை வலுப்படுத்துவதாகவே அமையும்.

மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலமைந்த எந்தவொரு போர்நிறுத்த உடன்படிக்கையினதும் இருப்பு, இரு தரப்பினது படை வலுச்சமநிலையும் சம அந்தஸ்தும் பேணப்படுவதிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையில் சம அந்தஸ்தும் வலுச்சமநிலையும் பேணப்படுவதை உறுதிப்படுத்தவேண்டிய தேவை உணரப்படவில்லை. இந்தத் தேவை, எந்தவொரு பிணக்கினையும் சமாதான வழிமுறை மூலம் தீர்ப்பதற்கு அவசியமானதாக கருதப்படுகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை சிதைந்து போவதற்கும் அமைதிப் பேச்சுகள் குழம்புவதற்கும் இதுதான் வழிவகுத்தது. சிறிலங்கா அரசின் பரப்புரைகளைச் செவிமடுத்து பேச்சுகளில் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாகப் பங்குபற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளைப் "பயங்கரவாதிகள்" என ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகள் அறிவித்தமை அமைதிப்பேச்சுக்களின் முன்னெடுப்பை கேள்விக்குறியாக்கியதுடன், தமிழர்களது சுய நிர்ணய அரசியல் போராட்டத்தினை நசுக்கி, சிறிலங்கா அரசாங்கத்தின் விட்டுக்கொடாத இராணுவத் தீர்வை நோக்கிய நகர்வை வேகப்படுத்தியது துரதிஸ்டவசமானதே. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ முனைப்புக்கள் என்பன போர் நிறுத்த ஒப்பந்தத்தினை அர்த்தமற்றதாக்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருவெற்றி மூலம் தமிழ் மக்கள் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் ஓர் தேசிய விடுதலை இயக்கம். எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் சுய நிர்ணய உரிமை கொண்ட மக்களாக வாழ்வதற்கே நாம் விரும்புகிறோம்.
சிறிலங்காவின் இறைமையையும் நில ஒருமைப்பாட்டையும் காரணங்காட்டி தமிழர் தாயகத்தின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடானது தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது.

சர்வதேச சமூகமானது இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகிறது போலத் தெரிகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட தென் சூடான் மக்கோ உடன்படிக்கை (Machkos protocols) சூடானின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றது என்றோ, சேர்பிய மொன்ரநீக்ரோ உடன்படிக்கை மற்றும் கொசோவோவின் எதிர்காலத்துக்கான தீர்மானம் சேர்பியாவின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றது என்றோ சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப்படவில்லை.

இங்கு குறித்த இம்மக்கள் தமது சுயநிர்ணய உரிமையுடனும் இறைமையுடனும் வாழ வழிசெய்யப்பட்டுள்ளதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, நிராகரிக்கப்பட்டுள்ளமையானது எமது மக்களின் நம்பிக்கைகளையும் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பான அவர்களது எதிர்பார்ப்புகளையும் சிதைத்துள்ளது. "பயங்கரவாதத்திற்கு" எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது.

இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது. மாறாக, சுயநிர்ணய உரிமை கொண்ட இறைமையுள்ள மக்களாக வாழ்வதற்கான விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் மக்களை இட்டுச் செல்வதற்கே இது வழிவகுக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.puthinam.com

Read More...