Thursday, March 06, 2008

சிவராத்திரி வாழ்த்துக்கள்


முன்னரெல்லாம் சிவராத்திரி என்றால் 4 காலப்பூஜையும் விழித்திருந்து முழித்திருந்து திரைப்படம் பார்ப்போம்.இப்போது 10 மணிவரை முழித்திருந்தாலே அடுத்தநாள் கடினப்பட்டுத்தான் ஆணி பிடுங்க போகவேண்டியிருக்கிறது.அப்படியும் எழும்பாவிட்டால் நித்திரையோ தமிழா என்று இயக்கப்பாடல் வேறு காதுக்குள் மனதுக்குள் பாட ஆரம்பித்துவிடுகிறது.எனவே அந்தப்பயத்திலாவது தூக்கத்தைவிட்டு எழும்பிவிடுவேன்.

எனவே சிவராத்திரியை கொண்டாடுபவர்களுக்கு எனது சிவராத்திரி வாழ்த்துக்கள்.


இனி கொஞ்சம் ஒட்டுப்படை(cut and paste) வேலை(நன்றி தினமலர்)


01. தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் : ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை


சிவராத்திரி தோன்றிய கதை : "சிவம்' என்ற சொல்லுக்கு "சுகம்' என்று பொருள். சிவராத்திரி நாளில் விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். ஆனால் இக்காலத்தில் சிவராத்திரி விரதம் என்பது கேலிக்கூத்தாக மாறிவிட்டது. இரவு நேரத்தில் விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா பார்ப்பது, விளையாடுவது போன்ற தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.


இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்கு பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும், உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க பார்வதிதேவி சிவனை பூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே "சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது.

மற்றொரு கதையின்படி சிவனின் கண்களை பார்வதி தேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள். மகாபாரதத்திலும் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. சாந்தி பர்வத்தில், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது, சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகாசிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான்.


இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை கூறும் நினைவுசக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்த பிறவியில் அவன் ஒரு வேடனாக இருந்தான். சுச்வரன் என்பது அவனது பெயர். இந்த சொல்லுக்கு "இனிய குரல்' என்பது பொருள். அந்த வேடனின் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். ஒருமுறை வேட்டைக்கு சென்ற அவனுக்கு விலங்குகள் ஏதும் கிடைக்காததால் ஒரு வில்வமரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். இரவு நேரமும் வந்துவிட்டது. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது.

அவர்கள் பட்டினியுடன் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்து கண்ணீர் வடித்தான். அன்று முழுவதும் அவன் சாப்பிடாததால் பசியும் தாகமும் வாட்டி எடுத்தது. பொழுது போகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த இலைகளை பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தான். மறுநாள் காலையில் ஒரு மான் சிக்கியது. அப்போது மற்றொரு வேடன் வந்தான்.

அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான்.
அவனும் பசியால் இருப்பதை உணர்ந்த வேடன், தன்னிடமிருந்து மான் இறைச்சியின் ஒரு பகுதியை அவனுக்கும் கொடுத்தான்.

பிறகு வீட்டிற்கு சென்று அனைவரும் சமைத்து சாப்பிட்டனர். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் பல மிருகங்களைக் கொன்ற பாவங்களை செய்தவன் என்பதால் எமகிங்கிரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ஆயினும் அவன் மரத்தின் மீது அமர்ந்திருந்தநாள் சிவராத்திரி என்பதாலும், அன்று பட்டினி கிடந்ததாலும், தன்னை அறியாமலே இலைகளை கிள்ளிப்போட, அவை மரத்தின்கீழே இருந்த லிங்கத்தின்மீது விழுந்ததாலும் அவனுக்கு சிவபதம் கிடைத்தது. இந்த கதையின்படி பார்த்தால் வில்வ இலை சிவராத்திரியன்று மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இரவு முழுவதும் சிவாலயத்தில் தங்கியிருந்து வில்வ இலையால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நான்கு ஜாமமும் அவருக்கு நடக்கும் பூஜையை காணவேண்டும். சிவராத்திரி அன்று பகலிலும் இரவிலும் சாப்பிடக்கூடாது. விரதத்தின் முடிவில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இந்த விரதம் முழுமையானதாக அமையும்.


ஐவகை சிவராத்திரி : சிவராத்திரி ஐந்து வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நித்ய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் நித்திய சிவராத்திரி எனப்படும். இந்த சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க விரும்புபவர்கள் தொடர்ந்து 24 முறை அனுஷ்டிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு வசதிப்படாத நாட்களை கழித்துவிட்டு 24 முறை அனுஷ்டிக்கலாம்.


பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு 14ம் நாளான சதுர்த்தசி அன்று முழுமையாக சாப்பிடாமல் இருந்து அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வில்வமாலை சாத்தி வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.


மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி,ஆவணியில்வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.


யோக சிவராத்திரி: ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் பகலிலும் இரவிலும் முழுமையாக அமாவாசை திதி இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். இது மிக அபூர்வமாகவே வரும்.


மகா சிவராத்திரி: ஒவ்வொரு தெய்வத்திற் கும் ஒவ்வொரு திதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்கென ஒதுக்கப்பட்டது இறுதி திதியான சதுர்த்தசி. சிவன் அழிக்கும் தெய்வம். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி "பெரிய இரவு' என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இது மகாசிவராத்திரியாக அனுஷ்டிக்கப்படுகிறது.


விழித்திருப்பது ஏன்? :சிவராத்திரி அன்று இரவு முழுவதும் உணவை விலக்கி விழித்திருக்கிறார்கள். உடலுக்கு உணவில்லாமல் இருக்கும் போது அது தானாகவே அடங்கிவிடும். உறக்கத்தை விலக்கினால் உடல் மேலும் வலுவிழந்துபோகும். இத்தகைய சூழ்நிலையே இறைவழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது. பசியுடனும், துõக்க கலக்கத்துடனும் இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.


சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.


அட்டஹாசம் என்றால் என்ன தெரியுமா? : அழகான ஒருவரை பார்த்தால் "அட்டகாசமாய் இருக்கிறாரே' என்று கேலியாக சொல்வது வழக்கம். ஒரு பெண்ணின் வயிறு மூன்றாக மடியும். இதில் இரண்டாம் மடிப்பின் பெயர் "அட்டஹாசம்'. தட்சனின் யாக குண்டத்தில் தாட்சாயணி விழுந்ததும், அவளது உடலுடன் சிவன் நடனமாடினார். அப்போது அம்பிகையின் உடல் 51 இடங்களில் சிதறிவிழுந்தது. அவை சக்தி பீடங்கள் எனப்பட்டன. அந்த பீடங்களில் ஒன்றின் பெயர் அட்டஹாசம். இங்குதான் அம்பிகையினுடைய வயிற்றின் இரண்டாம் பாகம் விழுந்தது. முதல் மடிப்பை "மாருதேச்வரம்' என்றும், மூன்றாம் மடிப்பை "வீரஜம்' என்றும் அழைப்பர்.


பிரார்த்தனை : சிவராத்திரியன்று திரும்பத்திரும்ப இந்த வாசகங்களை சொல்ல வேண்டும்.

* என் இதய தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமாகிய சிவனை நான் வணங்குகின்றேன். சிரத்தை, பக்தி ஆகிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் துõய மனதால் அவருக்கு அபிஷேகம் செய்கிறேன். சமாதிஎன்னும் நறுமண பூக்களால் நான் அவரை வழிபடுகிறேன். இவையெல்லாம் எதற்காக என்றால், நான் இனி இந்த பூமியில் பிறக்கக்கூடாது என்பதற்காக.

* சிவபெருமானே! நீரே எனது ஆத்மன். என் மனமே பார்வதி. என் பிராணனே உமது சேவகன். என் உடலே உமது வீடு. எனது அன்றாட செயல்களே உமக்கு செலுத்தும் வழிபாடு. என் உறக்கமே சமாதி. என் நடையே உமை சுற்றிவரும் பிரதட்சணம். என் பேச்சே பிரார்த்தனை. இவ்விதமாக நான் எனக்குள் இருக்கும் அத்தனையையும் உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன்.


விரத முறை : சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதி மற்றும் சுபிட்சத்திற்காக சிவாலயங்களில் ஹோமம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். "ஓம் நவசிவாய' என்ற மந்திர ஜபத்தை கோயில்களில் ஜபிக்க வேண்டும். அன்று இரவில் கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம' என்ற நாமத்தை ஜெபிக்க வேண்டும். இரவின் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை, நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாகசிவலிங்கத்திற்குசமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத் தாலும், மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மணம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

2 comments:

Anonymous said...

தீவண்ணை வரவர பக்திப்பழமாகிறீங்க.சிவராத்திரி வாழ்த்துக்கள்

theevu said...

//தீவண்ணை வரவர பக்திப்பழமாகிறீங்க//

அப்படியெல்லாம் இல்லை‌ மொக்கைப்பதிவுகள் அலுத்துவிட்டது.

அதுதான் இன்று ஒரு கட் அன்ட் பேஸ்ற்
விளையாட்டு.