Wednesday, October 17, 2007

யோ..யோ..யோ..யோய்யயயோ பொப்மார்லி



ஃப்பல்லோ சோல்ஐர்...பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிக அதிகமாக என்னைப் பாதித்தது. அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரை நினைவுறச் செய்தது. 'ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்..', 'அட்டைக்கடியும் அரிய வழிநடையும்...', நாங்கள் உழைக்கவும் சாகவும் மட்டுமே...', என்னும் அம்மக்களின் சோகச் சொற்தெறிப்புகளின பாரத்தை பொப் மார்லியிடம் பெறலானேன்.

இலக்கியவாதியும் முன்னாள் ஈரோஸ் போராளியுமான் கிபி அரவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட இந்த கட்டுரை அப்பால் தமிழ் இணையத்தளத்திலிருந்து.. நன்றி


பொப்மார்லி பற்றி என்னால்(கறுத்தான்) எழுதப்பட்ட இக்கட்டுரை மெளனம்-2(ஓக.செப்.ஒக்.1993) இதழில் வெளிவந்தது. பொப்மார்லியின அறுபதாவது நினைவு நாளை பகிர்ந்து கொள்ளும் வகையில் மீளவும் இக்கட்டுரை சிறு திருத்தங்களுடன் பிரசுரமாகின்றது.


'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் WAILERS'


பொப்மார்லியின் அறிமுகம் கிடைத்து பத்தாண்டுகளாகின்றது. அவ்வேளை அவன் இறந்து இரண்டு வருடமாகி இருந்தது. 1983ல் உச்சநிலையை அடைந்த இலங்கைத்தீவின் துயரங்கள் வெளிநாடுகளில் இருந்த இளைஞர் பலரை தாயகம் நோக்கித் திருப்பி இருந்தது. அவர்களில் ஒருவனாக கபிலன் கூடவே பொப்மார்லியுடன் வந்து சேர்ந்தான்.


ஒலிநாடாவில் பொப்மார்லியின் குரல்கேட்ட முதல் தருணத்திலேயே அவனது உயிர்த்திருத்தலின் சாத்தியத்தை உணரலானேன். குரலில், இசையில் இழைந்தோடிய அழுகையும் விம்மலும் இசைக்கருவிகளின் சுண்டியிழுக்கும் அதிர்வும் எனன்னுள் கிளர்ச்சியூட்டின. அந்த கிளர்ச்சி துன்புறுத்தலின் இன்பத்தால் நான் துடித்தேன். கேட்டவைகள் விம்மல் வெடிப்புகள், உயிர் வதையின் வீச்சுகள்.

ஃப்பல்லோ சோல்ஐர்...பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிக அதிகமாக என்னைப் பாதித்தது. அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரை நினைவுறச் செய்தது. 'ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்..', 'அட்டைக்கடியும் அரிய வழிநடையும்...', நாங்கள் உழைக்கவும் சாகவும் மட்டுமே...', என்னும் அம்மக்களின் சோகச் சொற்தெறிப்புகளின பாரத்தை பொப் மார்லியிடம் பெறலானேன். அவனது அப்பாடலின் இடை நிரவலாக சேர்ந்திசைக்கப்படும் யோ..யோ..யோ..யோய்யயயோ.. எனும் பல்குரலோசை தேயிலை போர்த்திருக்கும் மலைக்குன்றுகளிடையேயான ஓலமாய் என்னை வதைத்தது. தாயகத்தின் புறச்சூழல் தந்த நெருக்குவாரத்தில் அந்த ஒலி நாடாவும் கைதவறிப்போனது.

1991ல் ஐரோப்பாவிற்கு அகதியாய் வந்தடைந்து அலைந்தபோதுதான் மீளவும் அந்த இறவாத பொப்பார்லியை தரிசித்தேன். இப்போது அவன் மிக இளமையாய், துள்ளலாய், எங்கெங்கும் வியாபி்த்தவனாய் உயிர்த்துடிப்புடன் இருந்தான். ஆச்சரியமாய் இருந்தது.

ஐரோப்பிய தொலைக்காட்சி ஒளிபரப்பின் இசை அலைவரிசைகளில் தேர்வு பெறும் முதல பத்து பாடல்களில் படதடவைகள் பொப்மார்லியும் இருக்கின்றான். மெத்ரோவினுள், மெத்ரோ நடைபாதைகளுள், பலர்கூடும் பரந்த வெளிகளில், துள்ளும் இளைஞர்களின் சேர்க்கையில், காணும் இடந்தோறும் அவனைத்தரிசிக்கின்றேன். அவனது வாழ்க்கை விவரணத்தொகுப்பான Time Will Tell படத்தை திரையில் பார்க்கையில் பல ஐன்னல்கள் என்னுள் திறந்து மூடின. இசைக்காற்றில் அறைந்து அதிர்ந்தன. கண்களை மூடிய மோனநிலையிலேயே பெரும்பாலும் அவன் பாடுகின்றான். அளவுக்கதிமாக அலட்டிக்கொள்ளாத உடல் அசைவுகள், துள்ளல்கள். இசைச் சேர்க்கைகளில் பாடல்கள்தான் எப்போதும் முன்மொழிவுகளாகின்றன. றேகே இசையின் சிறப்பம்சமே பாடல்கள்தான். றேகே இசையின் அரசன் என்றே பொப்மார்லி வர்ணிக்கப்படுகின்றான். குறியீடாக கொள்ளப்படுகின்றான். அவன் பாடகன் மட்டுமல்ல, பாடலாசிரியன், மெட்டமைப்பவன், இசைக்கருவிகளை கையாளபவன், இசைஞன், கலைஞன்.

கரீபியன் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றான யமேக்கா தீவுதான் றேகே இசையின் உற்பத்தி இடமும், றேகே இசையரசன் பொப்மார்லியின் பிறந்த இடமுமாகும். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையே அத்திலாந்திக்மாகடல் உட்குழிந்த பகுதியே கரீபியன் கடல். இக்கடலிடை எழும் புயற்காற்றுத்தான் ஹரிகேன் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இப்புயற்காற்றில் அணையாமல் இருக்கக வடிவமைத்து தயாரிக்கப்பட்டதுதான் ஹரிகேன் லாம்ப்.

அதுவே நம்மிடை அரிக்கன் லாம்பென புழக்கத்தில் உள்ளது. இக்கடலில் காணப்படும் தீவுக்கூட்டங்களே மேற்கு இந்தியத் தீவுகளாகும். இத்தீவுகளில் ஒன்றில்தான் இநதியாவுக்க கடல்வழி தேடிப் புறப்பட்ட கிறிஸ்தோபர் கொலம்பஸ் வந்திறங்கினான். அத்தீவுக் கூட்டத்திடை அளவில் மூன்றாவது பெரிய தீவு யமேக்கா. இதன் பூர்வீக் மக்கள் அரவாக்கள். அமெரிக்க பூர்வீக மக்களினங்களில் ஒரு வகையினர். 1494ல் கொலம்பஸ் இத்தீவுக் கூட்டஙகளிடை வந்திறங்கியதன் பின் ஸ்பெயின் நாட்டின் கொலணியான யமேக்கா,1855ம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் கைக்கு மாறியது. கரும்பினை பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாகவும் தொழிற்துறை உற்பத்தியாகவும் மேற்கெர்ணட பிரித்தானியா அவற்றில் உழைக்க ஆபிரிக்க மக்களை, கறுப்பர்களை, அடிமைகளாகவும் கூலிகளாகவும் பிடித்து வந்தனர். இந்த அடிமைகளின் சோகம், கோபம், ஏக்கம்... இவைதான் றேகே இசை.

'NO WOMAN NO CRY' 'வேண்டாம் பெண்களே அழவேண்டாம்...' எனும் பொப்மார்லியின் புகழ்பெற்ற பாடலினை கேட்கும் போதெல்லாம் என் காதில் பாரதியின் குரல்தான்.

'விம்மிவிம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ?அவர்
விம்மியழவும் திறங்கெட்டு போயினர்..'
(கரும்புத்தோட்டத்திலே)


எனும் சோகச் சொற்களால் நெஞ்சம் துன்புறுமே, எழுத்துதரும் துன்பமே தாங்க முடியாதபோது நரம்பு சுண்டும் இசையில் குழைந்துவரும் குரலில் 'NO WOMAN NO CRY' அப்பப்பா... ஆம் அவன் பாடல்கள் துயரப்பட்டவர்களுக்கானது.

யமேக்கா தீவின் தலைநகரான கிங்ஸ்ரனில் தெருமுனைப்பாடகனாக பாடித்திரிந்த ஏழை பொப்மார்லி, தன் இசை அறிவினால், பாட்டுக்கட்டும் ஆற்றலினால், அதன் வீச்சினால் றேகே இசையின் உற்பத்தி இடமாய் யமேக்காவை குறிக்கச் செய்ததுடன், உலகின் கவனத்தையும் யமேக்கா மீது குவியச் செய்தான் பெருமை சேர்த்தான் என்கிறது யமேக்காவின் வரலாற்றுக் குறிப்பு.

06-02-1945ம் ஆண்டில் பிறந்த பொப்மார்லி பாடல் எழுதவும், பாடவும் வல்லமை கொண்டிருந்த தன் தாயிடமிருந்தே இசையை கற்றுக் கொண்டதாகவும், கிட்டார் இசைக்கருவியை தானே பயின்றதாகவும், புகழ்பெற்ற பின்னர் பத்திரிகையாளரின் கேள்வியொன்றின் போது பதிலளித்துள்ளான். பொப்மார்லி தன் இளவயது வாழ்க்கைபற்றி 'CONCRETE JUNGLE' என்னும் பாடலில் இப்படிப் பாடுகின்றான்....

இன்றுள்ளதைப்போல் எனது நாட்களில்
சூரியன் எப்பொதும் ஒளிர்ந்ததில்லை.
உயரத்தே மஞ்சள் நிலா
விளையாட வெளிவந்ததில்லை
நான் சொல்கிறேன்
என் வாழ்வின் ஒளியை
இருள் மூடி இருந்தது.
எனது நாட்கள் இரவினுள்தான்
நகர்ந்தது.
அன்பை அமைதியை
எங்கே நான்
கண்டடையலாம்..
எவரும் எனக்கு
சொல்லவில்லை
சுற்றிலும் எங்கேனும்
இருக்ககூடுமென
கொங்கிறீற் வனத்தைக் காட்டினர்..

இப்படித் தன்வாழ்க்கையை, தன்சுற்றத்தை, தன்கவலையையே எப்பொழுதும் தன் பாடலில் பதிவுசெய்தான். தன் நண்பர்களுடன் தொடங்கிய இசைக்குழுவிற்கு 'WAILERS' என்றே பெயரிட்டான். இந்தச் சொல்லை விவிலியத்தில் (Bible) இருந்தே தான் பெற்றதாய் கூறுகிறான். 'WAIL' என்பது அழுகை, புலம்பல் என்பதைக் குறிக்கும். தனது இசைக்குழுவிற்கு 'அழுகைக் குரலாளர்' எனப்பெயரிட்டதன் பொருத்தத்தை அவனது பாடல்களை கேட்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை அவன் கூறினான்

'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் 'WAILERS' என்றான். அவனது பாடல்களில் யமேக்கா அடிமை மக்களின் துயரம் வெளிப்பட்ட போதும் அவை உலகெங்குமான துயரங்களுடன் அடையாளங்காணப்பட்டதும், ஒன்றித்ததும் தற்செயலானதல்ல. ஒரு எழுத்தாளர் அவனை 'மூன்றாம் உலகின் பாடல் குரலோன்' எனச் சிறப்பித்துள்ளார்.

அவனது பாடல்களில் தொன்மை தொன்மம் பற்றியதான உள்ளடக்கங்களுடன் விவிலியத்தின் பழைய ஏற்பாடு கூறும் கருதுகோள்களும் விரவிக்கிடப்பதைக் காணலாம். அத்துடன் ஃகார்வேயிசம் என்னும் சிந்தனைத் தாக்கத்தாலும் தத்துவத்தினாலும் பொப்மார்லி கவரப்பட்டிருந்தான். ஃகார்வேயிசத்தின் மூலவரான மார்குஸ் மொசய் ஃகார்வே (MARGUS MOSIAH GARVEY), அடிமைப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பராக மதிக்கப்படுபவர்.

யமேக்காவின் தேசியவீரராக அரசால் ஏற்கப்பட்டவர். யமேக்காவின் கல்விப்பாடவிதானத்தில் அவரது போதனைகள் சேர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. யமேக்காவில் 1887ல் பிறந்த ஃகார்வே 'ஆபிரிக்காவுக்கு திரும்புதல்' ஆபிரிக்கா ஆபிரிக்கருக்கே' என்னும் கோட்பாட்டையும் அதற்கான இயக்கத்தையும் நடாத்தி வந்தார். இருண்ட கண்டமென்று பெயரிட்டு அந்த ஆபிரிக்ககண்டம் முழுவதையுமே ஐரோப்பா அடிமைப்படுத்தியிருந்த முதலாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் ஃகார்வேயின் இம்முழக்கங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவருடைய சிந்தனைகளும் செயற்பாடுகளும் புரட்சிகரமானது துணிச்சல் மிக்கது என வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.

'நாம் அணிசேர்வோம். மற்ற மனிதர்களை வெறுப்பதற்காய் அல்ல. நம்மைநாமே உயர்த்திககொள்ள, நமக்கு மறுக்கப்பட்ட மனிதத்துவத்தை வற்புறுத்த. நாம் தயாரிததுள்ள வேலைத்தி்ட்டம் நியாயமானது என்று நம்புவோம். நாம் பிரகனடம் செய்வோம், ஆபிரிக்கா விடுதலை பெற, இயந்திர ஆலைகள் கொண்ட பெரு முதலாளிகளின் அடிமைப்படுத்தலில் இருந்து நீக்ரோ இனம் முழுமையும் விடுதலைபெற, நாம் சமரசம் செய்யத் தேவையில்லை.

நாம் அணிசேர்வேம்...'என்னும் முழங்கினார் ஃகார்வே. இந்த முழக்ங்களை பரப்புரை செய்தவண்ணம் மேற்கு இந்தியத் தீவுகள், மத்திய - தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகள் எங்கும் பயணம் செய்தார். கறுப்பின மக்களை அணிசேர்க்க உழைத்தார். 1919ம் ஆண்டில் இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பொன்றை நிறுவி அதன் முதல் கிளையை அமெரிக்காவில் செயல்பட வைத்தார். உலக நீக்ரோ மேம்பாட்டு கூட்டமைப்பு(U.N.I.A) என்பது அவரது இயக்கததின் பெயராகும். அடிமைகளாய் பிடித்துவரப்பட்டிருந்த மக்களை மீளவும் தாயகமான ஆபிரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்கான கப்பல் நிறுவனம் ஒன்றினையும் நிறுவினார்.

ஆனால் அமெரிக்க அரசானது ஃகார்வேயின் மேல் வரிஏய்ப்பு எனற காரணத்தைக்காட்டி வழக்கு தொடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.

பின்னாளில் பொப்மார்லி தனது 'SO MUCH THINGS TO SAY' என்னும் பாடலில் இப்படிப்பாடினான்...

'நிறையவே உள்ளது சொல்வதற்கு
மறப்பதற்கு எனக்கு வேறு வழியில்லை..
அவர்கள் யேசுக்கிறிஸ்துவை
சிலுவையில் அறைந்தார்கள்.
நான் மறக்க வேறு வழி ஏதுமில்லை.
அவர்கள் மார்குஸ் ஃகார்வேயை
அரிசிக்காய் விற்றார்கள்.
ஆதலால் எந்த வழியுமிலலை நீ மறக்க
நீ யாராய் இருக்கலாம்
இந்தப் போராட்டத்தில் நீ எந்தப்பக்கம்....'


ஃகார்வே விதைத்த தொன்மங்களே பொப்மார்லியின் பாடல்களின் அடிநாதமாகும்.

1930ம் ஆண்டில் எதியோப்பியாவின் மன்னராக 'கெய்லி செலாசி'(Haile Selassie) முடிசூடியபோது மார்குஸ் ஃகார்வே ' கறுப்பு அரசன் முடிசூடுகின்றான். கறுப்பரின் இராச்சியம் எழுகின்றது. அவன் கடவுளின் பிரதிநிதி.விவிலியம் கூறும் அரசுரிமையின் தொடர்...' என்றெல்லாம் முன்மொழிந்து வரவேற்றிருந்தார். யமேக்கா மக்களும், பொப்மார்லியும் இக்கருத்துக்கும் கனவுக்கும் ஆட்பட்டிருந்தனர். 1940ம் ஆண்டிலேயே ஃகார்வே இறந்த போதிலும், 1960ம் ஆண்டு யமேக்காவின் அரசியல் சூழ்நிலை ஃகார்வேயின் சிந்தனைக்கும், கோட்பாடுகளுக்கும் புத்துயிரளித்தன. 1962ம் ஆண்டில் யமேக்கா கொலணித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பொருளாதார சீர்குலைவுக்கு நாடு உள்ளாகி இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதையும் விட அதிகரித்திருந்தது. இவ்வேளையில்தான் யமேக்கா தீவுக்கு அருகாமையான வட அமெரிக்காவில் அமெரிக்க கறுப்பர்களின் குடியுரிமை இயக்கம் உச்சம் பெறறிருந்தது. இவை யமேக்கா இளைஞர்களை றேகே இசையின்பாலும், றேகே இசைக்கலைஞர்களான 'றஸ்தபாரியன்'பாலும் ஈர்ப்புறச் செய்தன.


இந்த'றஸ்தபாரியன்' இயக்கம் (RASTARI MOUVMENT) எதியோப்பிய மன்னனாக 1930ல் கெய்லி செலாசி முடிசூடியபோதே தோற்றம் பெற்றது. ஃகார்வேயி்ன் கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் இவர்கள் கலகக்காரர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டனர். மதங்களை இவர்கள் நிராகரித்தார்கள். குறிப்பாக கத்தோலிக்க, கிறிஸ்தவ மதங்களை அடியோடு வெறுத்தார்கள். தங்களின் அடிமைநிலை இம்மதங்களாலும், மதம் பரப்பும் பாதிரிகளாலும் ஏற்பட்டதென நம்பினர். விவிலியம் கூறும் ஆதிவரலாறான பாபிலோன், கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி(எதியோப்பியா), இவையே அவர்களின் நம்பிக்கையாக இருந்தன.

'தாங்கள் போதிக்கும் எந்த சமயத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் பரிசுத்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கோருபவர்களுக்கு எதிராக அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் வேறு ஒரு கடவுளை, மதத்தை நாடுபவர்களாகவே இருப்பதை சரித்திரம் சான்று பகர்கின்றது. இதேபோல்தான் கிறிஸ்தவத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் றஸ்தபாரியம் என்பதனை மாற்றான மதமாக கொண்டார்கள். இதனை ஆனமீக விலங்குகளில் இருந்து விடுதலைக்காக போராடும் மதம் என்று கருதினார்கள்.' என்கிறார் ரீற்றா பொறாஸ் என்னும் கட்டுரையாளர்.

றஸ்தபாரியன்கள் தமக்கான வாழ்க்கை நெறிமுறை ஒன்றையும் கடைப்பிடித்தனர். தலைமுடியை வாராமல், வளர்ந்ததை முறுக்கி, தொளதொள ஆடையுடன் அவர்கள் காணப்பட்டனர். அவர்கள் கஞ்சா புகைத்தார்கள். சாப்பாட்டு முறையிலும் சில கட்டுப்பாடுகளை கைக்கொண்டனர். அதாவது உணவில் பன்றி இறைச்சியை தவிர்த்தார்கள். தங்கள் நிறமாக சிவப்பு,மஞ்சள்,பச்சை, எனக்கொண்டு அதனையே கொடியாக்கினர்.


பொப்மார்லியும் தன்னை றஸதபாரியன் என்றே அடையாளப்படுத்தினான். ஒரு தடவை பொப்மார்லி கூறினான் 'றஸ்தபாரி வெறும் திடீர் கலாச்சாரமல்ல. அது இயல்பான உண்மை'. 'நான் எப்போதும் றஸ்தபாரிதான்'. 'என்னிடத்தே மதம் இல்லை. நான் இயல்பானவன். இயற்கையானவன். நியாயங்களுக்கானவன். நான் றஸ்தபாரியன்'.

தனது புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான 'GET UP STAND UP' பாடலில் இப்படிப் பாடுகிறான்...

' மிக அதிகமான மக்கள் நினைக்கிறார்கள்
கடவுள் கட்டாயம் வானத்திருந்து வருவாரென்று
எல்லாவற்றையும் பொறுப்பேற்பாரென்று
இதுவே அவர்களின் உயர் எண்ணங்கள்
ஆனால் நீ அறிவாயா வாழ்வின் பெறுமானங்களை
நீ கட்டாயம் உன் பூமியை உற்றுப்பார்
இப்போ நீ ஒளியை உண்மையை உணர்வாய்
நீ எழு. நிமிர்ந்து நில்.
உன் உரிமைகளுக்காக எழுந்து செல்..'


அவன் நிகழ்கால உண்மைகளை நிலைமைகளையே பாடினான்.




1980ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொப்மார்லி ஜிம்பாவே நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தான். கொலணித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும், சிறுபான்மையினரா நிறவெறி வெள்ளையரின் ஆட்சிக்கெதிரான போராட்டத்திலும் வெற்றிபெற்ற ஜிம்பாவேயின் வெற்றி விழாவில் பொப்மார்லி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டான். சிறப்பிக்க்கப்பட்டான். இதனை தன் இசைவாழ்வின் பெருமிதமிக்க நிகழ்ச்சியாகவே பொப்மார்லி கருதினான். கறுப்பரின் எழுச்சியை காணமுடிந்ததே என்றும் மகிழ்ந்தான். ஜிம்பாவே பற்றிய அவனது பாடல் இன்றும் அந்நாட்டின் தேசியகீதம் போல் இசைக்கப்படுகின்றது. இதோ அந்தப் பாடல்..

'கையினில் கையாய் கருவி ஏந்தி
இச்சிறுபோரில் நாம் பொருதிடுவோம்
ஏனெனில் அதுவே ஒரேயொரு வழி
இச்சிறு எதிர்ப்பை மீறி நாம் எழுவோம்
சகோதரனே நீயே சரியானவன்
நீயே உரித்தானவன்
நாம் சண்டையை தொடவோம்
எம் உரித்துக்காய் போரிடுவோம்
பிரித்தாளும் ஆட்சித் தந்திரம்
ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும்
தனியே கண்ணீரை உகுக்கின்றது.
நெஞ்சத் துடிப்பும் அங்கே கேட்கின்றது.
ஆதலால் நாம் கண்டடைவோம்
யார் உண்மையான புரட்சிக்காரன்
நான் விரும்பவிலலை
தந்திரங்களினல் எனது மக்கள்
ஆயுதக்கூலிகளாவதை...'

ஜிம்பாவே வெற்றிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகிழ்வில் இருந்து மீள்வதற்கு முன் பொப்மார்லி சுகவீனமுற்றான். கரீபியன் தீவுகளிலும், தென் அமெரிக்காவிலும் பிரபல்யம் பெற்றதானSOCEAR என்னும் உதைபந்தாட்டத்தில் விருப்பம் கொண்டவன் பொப்மார்லி. 1980ம் ஆண்டு செப்படம்பர் மாத ஒரு காலைப்பொழுதில் தன் உடற்பயிற்சிக்காய் உதைபந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சுகவீனமுற்றான். எப்போதும் கஞ்சா புகைப்பதில் மூழ்கியவனான பொப்மார்லி கஞ்சா தேசத்தை குணப்படுத்தும் மருந்து, பழம் உண்பதைப் போன்றது.

சிந்தனைத் தெளிவிற்கும் உடல் நலத்திற்கும் ஏற்றது.' என்று அழுத்தத்துடன் கூறிவந்தவன். றஸ்தபாரியன்களும் 'கஞ்சா பொதுமை உணர்வை தருகின்றது' என்ற நம்பிக்கையை கொண்டிருந்தவர்கள். ஆனால் மருத்துவர்கள் கஞ்சாதான் பொப்மார்லியின் சாவுக்கு காரணமென கூறுகின்றனர். றொபேர்ட் நெஸ்டா மார்லி என்று முழுப்பெயர் கொண்ட, மக்களின் உணர்வுகளை கவலைகளை பாடலாய் மாற்றிய இசைச் கலைஞன் பொப்மார்லி 1981ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி த்ன முப்பத்தாறாவது வயதில் இறந்து போனான்.

அவனது இறுதிநாள் ஊர்வல நிகழ்ச்சி பற்றி எழுதிய பத்திரிகையாளர் ஒருவர் 'கற்களாலான சீனபெருமதிற் சுவர்போல் மக்கள் தலைகள் திரண்டு கிடந்தன. அவனுக்கு அஞ்சலி செலுத்தும் வரிசை மூன்று நாட்களின் பின்னாலும் முடிவுறாது இருந்தது.' எனக் குறிப்பிடுகின்றார்.

ஹரிக்கேன் புயலென பொப்மார்லி றேகே இசையுடன் எழுந்தான். அப்புயலிடை அவன தூவிய விதைகள் துயரமுறும் மக்களிடமெல்லாம் சென்ற தங்கியுள்ளது. அவனது சக்தி உமிழும் இசையை, பாடல்களை முறியடிக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவன் மீறியவனாய்...

'ஆம் என் நண்பனே
அவர்களுக்கு சொல்
நாங்கள் மிகவும் சுதந்திரமானோமென
என்னை அடக்க எச்சட்டத்தாலும் முடியாது
எந்தச் சக்தியும் என்னை கட்டுப்படுத்தாது...'


காற்றில் மிதக்கின்றது அவன் பாடல் சுதந்திரமாக.

பி.கு: 1993ல் இக்கட்டுரை எழுதுவதற்கு சில நூல்கள், கட்டுரைகள், ஒலி ஒளி நாடாக்கள் பயன்பட்டன. அவை எவை என்பதை தற்போது என்னால் குறிபபிட முடியாதிருக்கின்றது. குறைகள் இருந்தால் சுட்டுங்கள். கருத்துக்களை எழுதுங்கள்.

கிபி அரவிந்தன்.அப்பால்தமிழ்

10 comments:

சந்தனமுல்லை said...

நன்றி தீவு..
ppl think him as a prophet..

ரவி said...

இந்த மாதிரி கட்டுரை போட்டாத்தான புரிஞ்சுக்கறதுக்கு...

அது சரி...ஏன் இந்த அழுத்தமான உணர்ச்சி கலந்த இசையை ஈழத்தை சேர்ந்தவர்கள் கொடுக்கக்கூடாது ?

இசையின் மூலமாக பாப் மார்லி எடுத்து சொன்ன ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஏன் ஈழத்தவர்கள் கையில் எடுக்கவேயில்லை ? ( மொக்கையாக சில வீடியோக்கல் யூரூபில் பார்த்தென்)

மாசிலா said...

யம்மடியோவ்! இம்மாம் பெரிய பதிவா?

எனக்கு முன் முந்திட்டீங்க தீவு. நல்லது.

பிரஞ்ச் காரர்கள் இவரை ஒரு சகாப்தம் படைத்தவராகவே கருதுகின்றனர். "UNE LEGENDE".

என்பதுகளில், சமூகத்தில் ஒழுக்கம் என்கிற பெயரில் ஒரே கருத்து ஒரே கொள்கை என்பது போன்ற உலக தலைவர்களின் சர்வாதிகார அடக்குமுறை அதிகார போக்கை எதிர்க்கும் குணம்கொண்ட இளைஞர்கள் இவரது பிம்பத்தை அடிப்படையாக கொண்டுதான் தங்களது மாற்றுக்கருத்தை அதாவது அஹிம்சை, மற்றும் மனிதாபிமானம் அகங்காரத்திற்கு அடி படியாமை ஆகிய குணங்களை வெளிப்படுத்தினர்.

நல்ல ப'தீவு!

Anonymous said...

//அது சரி...ஏன் இந்த அழுத்தமான உணர்ச்சி கலந்த இசையை ஈழத்தை சேர்ந்தவர்கள் கொடுக்கக்கூடாது ?

இசையின் மூலமாக பாப் மார்லி எடுத்து சொன்ன ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஏன் ஈழத்தவர்கள் கையில் எடுக்கவேயில்லை ? ( மொக்கையாக சில வீடியோக்கல் யூரூபில் பார்த்தென்)//


யூ ருபில் பார்ப்பதும், இணைய்தில் படிப்பதும் மட்டுமல்ல ஈழம். அதற்கப்பால் நிறையவே உண்டு. இந்தப் பதிவிலேயே நல்ல இரு பாடல்கள் காட்டப்பட்டுள்ளன. "ஊரான ஊரிழந்தோம் " போன்ற பல பாடல்கள் உள்ளன.

" ஓ..மரணித்த வீரனே .." கேட்டிருக்கின்றீர்களா? அனுபவித்துக் கேட்டால் உள்ளுடைந்து போகும் ஒரு பாடல்.

theevu said...

வருகைக்கு நன்றி சநதனமுல்லை ரவி மாசிலா ,ஈழவன் மற்றும் நண்பர்களுக்கு

//" ஓ..மரணித்த வீரனே .." கேட்டிருக்கின்றீர்களா? அனுபவித்துக் கேட்டால் உள்ளுடைந்து போகும் ஒரு பாடல்.//

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒருமுறை இது பற்றி பதியவேண்டும்.பார்ப்போம்.

Anonymous said...

என்னப்பு மாசிலா மாமன் மச்சானெண்டு பயங்கர வாரப்பாடாக் கிடக்கு. நீரும் அவற்றை அங்கீகாரம் பெற்ற அகதியெண்டு சேட்டுபிக்கேற் வாங்கியிட்டீர் போல. எனக்கும் சொல்லியிருக்கலாம்தானே? இப்ப அவரிட்டை ரியூசன் எடுக்கிறியள்

கிபி அரவிந்தனே தமிழச்சியிடம் பெரியாரியம் பேச அங்கீகாரம் கிடைக்காமற் கஷ்டப்படுகிறார். தமிழச்சி எழுதினதைப் பாக்க நீர் அவற்றை கட்டுரையைப் போட வந்திட்டீர். துணிச்சல்தான்

theevu said...

//கிபி அரவிந்தனே தமிழச்சியிடம் பெரியாரியம் பேச அங்கீகாரம் கிடைக்காமற் கஷ்டப்படுகிறார்.//

ஐயா இந்த உள்குத்து விளங்கவில்லை .சற்று பொழிப்புரை தேவைப்படுகிறது.:)

அப்புறம் இண்டைக்கு எசகு பிசகாய் ரீபிஸீ கேட்டேன் அதில் நம்மட சபேசனின் பெரியார் கழகத்தை நல்லாய் வறுத்து எடுத்துடட்டாங்கள்.

அதில் சொன்னாங்கள் இந்த தலித் மாநாடு தொடங்கப்போகுது எண்டுதானாம் சபேஸன் அவசரமாக
கழகம் கொண்டவராம்.

நான் நினைச்சன் தமிழச்சிக்காக எண்டு..

இந்த ஈழ அரசியல் மட்டும்
விளங்குதேயில்லை.

Anonymous said...

தமிழச்சி கிபி அரவிந்தனைப் பகுத்தறிவுக்காரர் எண்டு சொல்லிக்கொள்ளுறதால துண்டுப்பிரசுரம் குடுக்க, கருவறைக்குள்ளை போய்ப் போராட அழைச்சதாயும் அவர் வரவில்லையெண்டும் நக்கலாப் போன கிழமை எழுதினதை வாசிக்கையில்லையோ? போய்த் தேடிப்பிடியுங்கோ. அவ ஒரு நாளைக்கு ஆறு பதிவு போடுவா. போய்த் தேடுறதெண்டது என்க்கு ஏலாத வேலை

Anonymous said...

செந்தழல் இரவிக்காக சில ஈழத்து மொக்கைகள்.
இந்தப் போரம்மாவைக் கேட்டுப்பாருங்கள்.
சும்மா அதிருதில்ல???

போரம்மா

வன்னியன் 'மொக்கை' போடுறதை நிப்பாட்டிப் போட்டார்.
தீவு, நீராவது மொக்கைகள் கொஞ்சத்தை இணைப்புக் குடுத்துவிடுமன்.

இன்னும் ஐந்து மணித்துளியில்...

விழியில் சொரியும் அருவிகள்

சூரியதேவனின் வேருகளே - மாவீரர்நாட் பாடல்

புலியொரு காலமும் பணியாது

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா

நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று

எந்தையர் ஆண்டதின் நாடாகும்

மாங்கிளியும் மரங்கொத்தியும்

லிவிங் ஸ்மைல் said...

தீவு.

முதன்முதலாக உங்கள் பதிவை படிக்க காரணமாக இருந்தது தங்களது ப்ரொபைல் படம். எனக்கு பாப் மார்லி அறிமுகமான சமயம் அது.

பகிடி செய்யும் உங்கள் எழுத்து எனக்கு பிடித்தாலும் போட்டோக்கு பொருத்தமாக ஒரு பதிவும் நான் படித்திருக்க வில்லை. இப்பதிவு அதற்கு விடை சொன்னது.

நீண்ட இப்பதிவில் பாதிதான் என்னால் படிக்க முடிந்தது. பாப் மார்லி குறித்த எனது பதிவு
http://livingsmile.blogspot.com/2006/08/blog-post_14.html

இந்த லிங்கில் தங்கள் பார்வைக்கு.

நன்றி