Thursday, February 21, 2008

பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது
தீரா நதி - அ.மார்க்ஸ்
சில மாதங்களுக்கு முன் ஒரு காலை நேரத்தில் நண்பரும் எழுத்தாளருமான வெளி ரங்கராஜனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சற்றே பதட்டம் நிறைந்த குரலில் அவர் பேசினார். பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது. அந்நாவல் குறித்த ஒரு விரிவான அறிமுகக் கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்த வேண்டும் என்றார். சமூக அநீதிகளைக் கண்டு கலங்குவதோடு, ஒரு எழுத்தாளன் என்கிற பொறுப்பில், அவற்றிற்கெதிராக ஏதேனும் செய்ய வேண்டும் எனத் துடிப்பவர் ரங்கராஜன். அண்டை மாநிலங்களில் உள்ள அளவு இங்கே நமது எழுத்தாளர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லாதது குறித்த கரிசனம் நிறைந்தவர் அவர்.

வீரப்பன் வேட்டை என்கிற பெயரில் தமிழக _ கர்நாடக அதிரடிப் படையினர் வீரப்பன் நடமாட்டமிருந்த வனப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீது அவிழ்த்துவிட்ட வன்கொடுமைகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது ‘சோளகர் தொட்டி’. பாலமுருகன் ஒரு எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் ஒரு மனித உரிமை போராளியாகவுமிருந்ததே அப்படி ஒரு நாவல் தமிழில் உருப்பெற்றதற்கான காரணம். ஏனெனில், நமது எழுத்தாளர்கள் பலருக்கும் இங்கு நடைபெறும் இத்தகைய மீறல்கள் பற்றிய அறிதல் குறைவு. காவல்துறை, நீதிமன்றம், விசாரணை ஆணையங்கள், அரசு ஆகியன பற்றி ஒரு வகை விவீபீபீறீமீ நீறீணீss விமீஸீtணீறீவீtஹ் தான் நம் எழுத்தாளர்களிடம் உண்டு. தாங்கள் நடத்துகிற பத்திரிகைகளில் தலையங்கம் எழுதுவதற்காக அவ்வப்போது ஆவேசப்படுவதோடு சரி.

1993_ல் வீரப்பன் கும்பல் நடத்திய ஒரு தாக்குதலில் ஐந்து தமிழக போலீசார் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதற்குப் பின்னரே இங்கு தேடுதல் வேட்டை தீவிரமாகியது. தமிழ்நாடு _ கர்நாடக அரசுகள் இணைந்து கூட்டுச் சிறப்பு அதிரடிப்படை ஒன்றும் உருவாக்கப்பட்டது. நமது ஊடகங்களால் எதற்கும் துணிந்த மாவீரராகவும் கே.பி.எஸ்.கில், ஜுவியன் ரிபெரோ ‘ரேஞ்சிலான’ ‘சூப்பர் போலீசாகவும்’ சித்திரிக்கப்படும் வால்டர் தேவாரம் இந்தக் கூட்டு அதிரடிப்படையின் தலைவர். போலி மோதல்களில் நக்சலைட்டுகள் பலரைச் சுட்டுக் கொன்றது இவரது முந்தைய சாகசங்களில் முக்கியமானது. மிடுக்கான தோற்றம், முறுக்கிவிடப்பட்ட, வீரப்பனைக் காட்டிலும் விடைத்து நிற்கக்கூடிய மீசை ஆகியவற்றுடன் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்வதில் கில்லாடி இவர். வீரப்பன் வேட்டையன்றில் அடிபட்டு மருத்துவமனையிலிருந்த இவரைப் பேட்டி கண்டு எழுதப்பட்ட ஆனந்த விகடன் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. மீசையைச் சிரைத்துவிட்டு படுக்கையில் கிடந்த அவரைப் புகைப்படக்காரர் படம் எடுக்க முன்வந்தவுடன், சடக்கென எழுந்து கைப்பையில் வைத்திருந்த மீசையை எடுத்து ஒட்டிக் கொண்டு அவர் போஸ் கொடுத்தது அந்தக் கட்டுரையில் பதிவாகியிருந்த ஒரு செய்தி.

வீரப்பனுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற பெயரில் வனப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினரும், வீரப்பன் சாதியைச் சேர்ந்த ஏழை எளியவர்களும் அதிரடிப் படையினரால் சொல்லொணாத் துன்பங்களுக்கும் கடுஞ் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். சித்திரவதைக்கெனவே ‘‘ஒர்க்ஷாப்‘’’ என்றொரு கூடத்தை அமைத்திருந்தார் தேவாரம். அம்மணமாக்கி விசாரணை செய்வது, உடலுறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பெண்களாயின் அவர்களின் கணவர், பெற்றோர், சகோதரர் முன்னரே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி வன்புணர்ச்சி செய்வது, கடைசியாய்ச் சுட்டுக் கொன்று உடல்களை ஆற்றில் வீசி எறிவது... முதலிய காரியங்களுக்காகவே நிறுவப்பட்டது அந்த ‘ஒர்க்ஷாப்’. கொல்லப்பட்டவர்களை ஆற்றில் வீசி எறிவதற்கெனவே கைது செய்து பலகாலம் வைக்கப்பட்டிருந்த ஒருவர் நேரடியாகத் தனது அனுபவத்தை பொது, நிகழ்வொன்றில் வெளிப்படுத்தியதை நான் கேட்டுள்ளேன். மதுரையிலுள்ள ‘மக்கள் கண்காணிப்பகம்’ இவற்றை ஆவணப்படுத்தியுள்ளது.

அதிரடிப்படையினருக்கு விசாரணை செய்யும் உரிமை கிடையாது. கைது செய்து, அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைப்பது மட்டுமே அவர்களுக்கு இடப்பட்ட பணி. இருந்தும் விசாரணை உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டார் தேவாரம். விசாரணையின் பெயரால் வேறு பல உரிமைகளும் அதிரடிப் படையினருக்குக் கைவசமாகியது.

இந்தக் கொடுமைகளெல்லாம் நடைபெறத் தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு இவை வந்தன. அவர்களின் தீவிரமான முயற்சிகளின் விளைவாக, 1999 ஜூன் 28 அன்று தேசிய மனித உரிமை ஆணையம், ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜே. சதாசிவம் தலைவர்; முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் சி.வி.நரசிம்மன் உறுப்பினர். உடனடியாக இதற்குக் காரணமாக இருந்த சிவில் உரிமை அமைப்புகளின் மீது காழ்ப்பைக் கக்கத் தொடங்கியது காவல்துறை.

‘‘சுளையாக ஈட்டுத்தொகை கிடைக்கும் எனச் சொல்லி ஏழைப் பழங்குடியினரை எங்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர்’’ என தேவாரம் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார் (‘தி வீக், மார்ச் 19, 2000). விசாரணை ஆணையத்தைச் செயல்பட விடாமல் நீதிமன்றத் தடையன்றையும் (மார்ச், 2000) பெற்றனர். இரண்டாண்டுகட்குப் பின் தடை நீக்கப்பட்டு பிப்ரவரி 2002_ல் மறுபடி பணி தொடங்கியது. 2003 இறுதியில் ஆணையம் தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்த பின்னும் அடுத்த இரண்டாண்டுகள் வரை அது வெளியிடப்படவில்லை. மாநில அரசுகளிடமிருந்து பதில்கள் வரவில்லை என சதாசிவ ஆணையம், கூறியது. ஓராண்டுக்குப் பின் ‘ஒரிஜினல் காப்பி’யைத் தொலைத்துவிட்டோம். அதனால்தான் பதிலளிக்கவில்லை என கர்நாடக அரசு காரணம் சொல்லியது. மீண்டும் மனித உரிமை அமைப்புகள் அளித்த அழுத்தங்களின் காரணமாக 2005_ல் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து ஜோர்டான் ஃபிளெட்சரும் சுப்ரதிபிதா சர்காரும் எழுதிய நல்ல கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது (ணிறிகீ, நவ. 17, 2007) வெளி ரங்கராஜன் அதைப் படிக்க நேர்ந்திருந்தால், அதிர்ச்சியில் மயக்கமடைந்தே விழுந்திருப்பார்.

பலரும் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருந்ததையும், சுமார் 38 பேர் வரை ‘காணாமலடிக்கப்பட்டிருப்பதையும், ‘ஒரேஒரு பெண்’ மட்டும் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருப்பதையும், பலர் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதையும் ஏற்றுக் கொண்டு, இதற்காக 89 பேருக்கு 2.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் ஆணையிட்டுள்ளதை அறியும்போது, மனித உரிமை அமைப்புகளின் முயற்சிகள் குறித்து நாம் மகிழ்ச்சியடையக் கூடும். ஆனால் பாதிப்பிற்குள்ளானவர்களின் சாட்சியங்கள் அனைத்தையும் இரக்கமின்றிப் புறக்கணித்து, வன்கொடுமைகளுக்குக் காரணமான கொடூரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவவிட்டிருப்பதை அறியும் போதுதான், ஒருவர் நமது ஜனநாயகத்திலும், அரசியல் சட்டத்தின் ஆட்சி என்கிற கருத்தாக்கத்திலும் நம்பிக்கை இழக்கக்கூடும்.

நமது நீதிபதிகளின் ‘‘உள்நோக்கங்களை’’ விமர்சிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. அப்படிச் செய்வது நீதிமன்ற அவமதிப்பிற்குரிய குற்றம். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தன் மகனுக்காக பதவிக் காலத்தில் ஊழல் புரிந்தார் என ஒரு இதழ் ஆதாரபூர்வமாக எழுதினால், தண்டனை பத்திரிகை ஆசிரியருத்தான். திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் வாயில் மலத்தைத் திணித்த ஆதிக்க சாதியினரை விடுதலை செய்த நீதிபதி, அதே சாதியைச் சேர்ந்தவர் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஆளாக நேரிடும். அபரிமிதமான அதிகாரத்துடன் ஆட்டம் போட்ட அதிரடிப்படையினரும், கிட்டத்தட்ட கிராமமே பிணைக் கைதியாக இருக்க நேர்ந்த சூழலில், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான எந்த சட்ட வழி முறைகளும் இல்லாத நமது நாட்டில் இந்த எளிய மக்களைத் தைரியமூட்டி, செலவுசெய்து அழைத்து வந்து, ஆணையத்தில் முன் நிறுத்தி சாட்சியங்கள் சொல்ல வைப்பது எத்தனை பெரிய விஷயம். வன்புணர்ச்சி முதலான வழக்குகளில் அறைக்குள்ளேயே விசாரணை நடத்த வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணையையும் புறக்கணித்து விட்டு, யார் தம்மைக் கொடுமைப்படுத்தினரோ அந்த அதிகாரிகளின் கண் முன்னே சாட்சியங்களைச் சொல்ல வைத்தது சதாசிவ ஆணையம். சில ‘டெக்னிக்கல்’ காரணங்களைச் சொல்லி சில கொடூரமான சட்ட மீறல்கள் குறித்த சாட்சியங்களைப் பதிவு செய்யவும் மறுத்தது.

பாதிக்கப்பட்டவர்களை நம்பிக்கைக்குரியவர்களாகக் கருத மறுத்தார் கற்றறிந்த நீதிபதி சதாசிவம். காரணம்? ‘‘வீரப்பன் தேடுதல் வேட்டையில் மேற்கொள்ளப்பட்ட கடும் போலீஸ் நடவடிக்கைகள் என்பன பழங்குடியிலும் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் பரஸ்பரம் விரோதத்தையும், கோபத்தையும், வெறுப்பையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கும். எனவே ஒவ்வொருவரும் மிகைப்படுத்திப் பேசுவது இச்சமயத்தில் இயற்கைதான்’’ எனப் பாதிப்புக்குக் காரணமானவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே தட்டில் வைத்து நீதி பேசியது சதாசிவ ஆணையம்.

ஆக, பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாலேயே சந்தேகத்திற்குரியவர்களாகின்றனர். அவர்களின் கூற்றுக்கள் நம்ப முடியாதவையாகிவிடுகின்றன. பெரிய அணைகள் கட்டுவதற்கு, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்தும் பழங்குடியினரிடமிருந்தும் நிலங்களைப் பறிக்கும்போது, அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டுமென்பது சிவில் உரிமைப் பேரொளிகளின் வாதம். அங்கும் இந்திய அரசு இப்படித்தான் சொல்கிறது: ‘‘பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால் அவர்கள் எதிர்மறையாகத்தானே சொல்வார்கள். தேசிய நலன் என்கிற அடிப்படையிலிருந்துதான் பார்க்க வேண்டுமே ஒழிய எல்லோரிடமும் கருத்துக் கேட்டுக்கொண்டிருந்தால் திட்டம் மேலே நகராது.’’ ‘‘(பார்க்க : ராமஸ்வாமி அய்யர், ணிறிகீ, ஜூலை 28, 2007).

பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள். பொய்யையும் புரட்டையும் சொல்லி, மிகைப்படுத்திப் பேசி அதிக இழப்பீடு பெற முயற்சிப்பார்கள் என்பதே நமது அதிகாரவர்க்கத்தின் கருத்து. நீதி வழங்கும் நிலையிலுள்ளவர்களின் கருத்தும் கூட அதுவாகவே உள்ளது தான் நமது சூழலின் அபத்தம், இல்லை ஆபத்து. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சதாசிவம் ஆணையர் நிராகரித்த போதெல்லாம் சுட்டிக்காட்டப்பட்ட நியாயம் அவற்றிற்கு எதிரான வலுவான காரணங்களை காவல்துறை வைத்துள்ளது என்பதல்ல; மாறாக பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் நம்பற்குரியவையாக இல்லை என்பதே. பதினெட்டு வயது எதிரி, தான் 10 பேர் கொண்ட போலீஸ் கும்பலால் வண்புணர்ச்சி செய்யப்பட்டதைச் சொன்னபோது, அவளின் கணவனின் சாட்சியத்தில் அது இடம் பெறவில்லை என நிராகரித்தது சதாசிவம் ஆணையம். அதிரடிப்படை அதிகாரி ஒருவரால் தான் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, அதனால் கருவுற்றுப் பின் கருக்கலைப்பு செய்ததை லட்சுமி என்ற பெண் கூறியபோது, இந்த விஷயத்தை யாரிடமும் அவள் சொன்னதில்லை என்பதாலும், தனக்கு கருச்சிதைவு செய்த மருத்துவரின் பெயரைச் சொல்ல முடியாததாலும், அவளது சாட்சியத்தை நம்ப முடியாது என்று நிராகரித்தது ஆணையம்.

பெரியதண்டம் தங்கம்மாவை (40) கொளத்தூரில் வைத்துக் கைது செய்து இழுத்துச் சென்றது அதிரடிப்படை. தனது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அம்மணமாக்கி, அவதூறு செய்து, இடையிடையே ‘விசாரணை’ செய்து கொண்டே மூன்று நாட்கள் அறையில் வைத்துத் திரும்பத் திரும்ப வால்டர் தேவாரம் தன்னை வன்புணர்ச்சி செய்ததாக தங்கம்மா அளித்த சாட்சியத்தை நிராகரிப்பதற்கு ஆணையம் சொன்ன காரணம் அதிர்ச்சியளிக்கக் கூடியது. தன்னை வன்புணர்ச்சி செய்தது ‘‘தேவாரம்’’ என்று சொல்லாமல், அங்கே எல்லோரும் குறிப்பிடுகிறது போல ‘‘பெரிய அய்யா’’ எனச் சாட்சியத்தில் சொல்லிவிட்டாராம் தங்கம்மா. சதாசிவத்தால் இதை எப்படி ஏற்க முடியும்? தவிரவும் ‘பெரிய அய்யா’ என்ற பெயரில் அங்கே இன்னொரு அதிகாரி வேறு அதிரடிப்படையில் உள்ளாரே. தங்கம்மா சாட்சியம் சொல்லும்போது மிகவும் தைரியமாகப் பேசியுள்ளாள். எனவே அவரை யாரும் மிரட்டி மௌனமாக்கியிருக்க முடியாது. எனவே இப்போது சொல்பவற்றை நம்புவதற்கில்லை எனத் தீர்ப்புரைத்தது சதாசிவ ஆணையம். நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். வீரப்ப சாதனைக்காக அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் பரிசளிக்கப்பட்டதே, அப்போது தேவாரத்திற்கு வழங்கப்பட்ட வீட்டு மனையின் மதிப்பு மட்டும் சுமார் 1 கோடி என ஒரு இதழ் பதிவு செய்திருந்தது.

இப்படி நிறையச் சொல்லலாம். கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பித்ரி தன்னை இழுத்து வந்து துப்பாக்கி முனையில் மிரட்டினார் என ஒரு சாட்சி சொன்னபோது, ‘‘இதையெல்லாம் அவரே செய்ய வேண்டுமா, கீழேயுள்ள ஒரு அதிகாரியை அனுப்பிச் செய்திருக்க முடியாதா?’’ என்று கேட்டார் நீதிபதி. ‘‘ஒர்க்ஷாப்’’ என்று அதிரடிப்படையால் செல்லமாக அழைக்கப்பட்ட சித்திரவதை முகாமின் கூரையில் கொக்கி எதுவும் இல்லை என்பதால், கயிற்றில் தொங்க வைத்துச் சித்திரவதை செய்வதாகச் சொன்ன எல்லோரது சாட்சியத்தையும் நிராகரித்தது ஆணையம். நாடக பாணியில் மிகைப்படுத்தச் சொல்லி சாட்சிகள் அனுதாபம் தேட முயல்வதாக ‘கமென்ட்’ வேறு.

சித்திரவதையின்போது விலா எலும்பு முறிந்து போனதாக ஒருவர் கூறியபோது, எக்ஸ்_ரே வைக்கப்படவில்லை என அக்கூற்று ஏற்கப்படவில்லை. காதுமடல்களில் மின்சாரம் பாய்ச்சியதால் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற கோவிந்தம்மாளின் சாட்சியம் உரிய மருத்துவச் சான்றிதழ் இல்லை எனக் காரணம் காட்டிப் புறக்கணிக்கப்பட்டது.

சதாசிவ ஆணையம் மட்டுமல்ல நமது உயர்/உச்ச நீதிமன்றங்களும் கூட எளிய மக்களின் கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பதில்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான ஒரே பாதுகாப்பாக உள்ள ‘‘வன்கொடுமைச் சட்டத்தின்’’ படி தொடுக்கப்பட்ட வழக்குகளில் எவ்வாறெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களின் கூற்றுகளும், குற்றச்சாட்டுகளும் புறக்கணிக்கப்பட்டு, தீண்டாமைக் குற்றம் புரிந்த உயர் சாதியினர் நமது நீதிமன்றங்களால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற விவரங்கள் இதைக் காட்டிலும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை (பார்க்க : ரமேஷ் சுக்லாவின் கட்டுரை, ணி.றி.கீ., அக். 21, 2006) சுருக்கம் கருதி ஒரு சில மட்டும்:

1. ‘இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி’யின் (மிஞிஙிமி) தலைவர் வி.பி.ஷெட்டி என்பவர் அவ்வங்கியின் மேலாளர் பாஸ்கர் ராம்டெக் என்கிற தலித் அதிகாரியைச் சாதி கூறி இழிவு செய்ததற்காக மே 2005_ல் கைது செய்யப்பட்டார். ‘‘பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில் இச்சம்பவம் நிகழவில்லை’’ எனக் கூறி உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது. தீர்ப்பை வாசிக்கும்போது ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற்பறையில் இச் சம்பவம் நடந்தது போலத் தோன்றும். உண்மையில் மிஞிஙிமி வளாகத்தில் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தபோதே அந்த தலித் அதிகாரி இத்தகைய அவமதிப்பிற்காளானார்.

2. 1996_ல் தலைச்சேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் ஒன்றின்போது ‘இடது ஜனநாயக முன்னணி’ மாநாடொன்றில் கிருஷ்ணன் நாயர் என்பவர் ஏராளமான பொது மக்கள் முன் பேசும் போது, ‘‘அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மேலே ஏறி குதிக்கிறான்’’ என்றார். இது தொடர்பான வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இதற்குப் பொருந்தாது எனக் கூறி நாயரை விடுதலை செய்தது. இந்த நிகழ்ச்சி பொது இடமொன்றில் ஆயிரக் கணக்கானோர் முன் நிகழ்ந்த ஒன்று. ஆனாலும் இவ்வாறு சாதியைச் சொல்லி இழிவு செய்தபோது இழிவு செய்யப்பட்ட தலித் அந்த இடத்தில் இல்லை என்பதால், அது அவரை அவமதித்ததாகாது என்பது மேன்மை தாங்கிய நீதிபதியின் கருத்தாக இருந்தது.

3. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புல்சிங் என்கிற உயர்சாதி நிலப்பிரபு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல்லா என்பவரின் வீட்டை இடித்து அவர் மனைவியையும் கடத்திச் சென்றான். நிலத் தகராறு ஒன்றில் பர்சாரி என்கிற ஒரு தாழ்த்தப்பட்டவரை சாதி சொல்லி இழிவு செய்தான். இந்த இரு வழக்குகளிலிருந்தும் புல்சிங்கை விடுதலை செய்தது உயர்நீதிமன்றம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத் தகாதவர்களாக இருந்த பொதிலும், பொது இடங்களில் இந்த அவமானங்கள் நிகழ்த்தப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் இருந்த போதும் கூட ஏன் நீதிமன்றம் வழக்குகளைத் தள்ளுபடி செய்து, இழிவு செய்த உயர் சாதியானை விடுதலை செய்தது? புல்சிங்கிற்கும் பாதிக்கப்பட்ட தலித்களுக்கும் ஏற்கெனவே முன் விரோதமிருந்தது. எனவே தீண்டாமை நோக்கி இந்த அவமானம் நிகழ்த்தப்படவில்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக இல்லாத பட்சத்திலும் இந்த அவமானம் நிகழ்ந்திருக்கும் எனக் கூறினார் நீதிபதி.

இப்படி நிறையச் சொல்லலாம். தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளர் வைப்பதை எதிர்த்த வழக்கொன்றில் 12 மணி நேரம் தாமதமாகப் புகார் கொடுக்கப்பட்டது எனக் கூறி கர்நாடக உயர்நீதி மன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. பாதிக்கப்பட்டவருக்கான சாட்சிகள் அவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த மாதிரி வழக்குகளில் யார் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனரோ அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களா சாட்சி சொல்வார்கள் என்பதைக் கூட நீதிபதிகள் சிந்திக்கத் தயாராயில்லை.

பயங்கர வாதம் தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கும் பிணையில் அவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருப்பதற்கும் மும்முரம் காட்டும் நமது நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியினராகவும், ஏழை எளியவர்களாகவும், தலித்களாகவும் இருக்கும் பட்சத்தில் வன்கொடுமையாளர்களின் பால் காட்டும் இரக்கத்தை என்னென்பது.

வாரிசுகள்

நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டி எழுதும் வாய்ப்பே எனக்குக் கிடைத்ததில்லை. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அமெரிக்க அரசால் இங்கே நிதியமைச்சராகத் திணிக்கப்பட்ட இந்த உலக நிதி நிறுவன அதிகாரி தொடர்ந்து அந்த விசுவாசத்துடன் செயல்பட்டு வருவதைக் கவனிக்கும் யார்தான் அவரைப் பாராட்ட முடியும். இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையான ஒரு அரசியல்வாதியை இப்படித் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி எழுத நேர்கிறதே என்று இலேசான வருத்தமும் உண்டு. அவரைப் பாராட்டுவதற்கு இப்போது எனக்கொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

டாக்டர் மன்மோகன் சிங்கை நான் இப்போது பாராட்டுவது அம்ரித்சிங் என்கிற அவரது மகளுக்குத் தந்தையாக இருக்க நேர்ந்ததற்காக. பிரதமரின் மகளான அம்ரித்சிங், ஜமீல் ஜாஃபர் என்பவருடன் இணைந்து ‘சித்திரவதைக் கொடுமை: வாஷிங்டனிலிருந்து அபுகாரிப் வரைக்கும் அதற்கு அப்பாலும்’ என்றொரு நூலை எழுதியுள்ளார். கொலம்பியப் பல்கலைக்கழகம் இதை வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் இருவரும் வழக்கறிஞர்கள். அமெரிக்க சிவில் உரிமைக் கழகத்தின் (கிஞீலிஹி) உறுப்பினர்கள். அங்குள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியோடு பெற்ற ஒரு லட்சம் அரசு ஆவணங்களின் அடிப்படையில் அமெரிக்கக் காவல் முகாம்களில் நடைபெறும் சித்திரவதைக் கொடுமைகளைத் தோலுரிக்கிறது. இந்நூல் ‘‘அப்பா, புஷ்சுக்கு நீங்கள் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியாது’’ _ என ஒரு வேளை அம்ரித் சொல்லியிருக்கலாம்.

இந்தச் செய்தியை வாசித்த சரியாக ஒரு மாதத்தில் இன்னொரு வாரிசின் சாதனையையும் நான் அறிய நேரிட்டது. இது நம்மூர் இளவரசி கனிமொழியின் கன்னிப் பேச்சு தொடர்பானது. ராஜ்ய சபையில் சென்ற டிசம்பர் 3_ல் அவர் முதன் முதலாக முத்துதிர்த்துள்ளனர். கலைஞரின் மகள், திராவிட இயக்கத்தின் கொழுந்து, பெரியாரின் பாரம்பரியத்தில் வந்தவர், தமிழ்க் கவிஞர், பெண்ணியவாதி ஆகா, இவர் என்ன பேசியிருப்பார் என ஆவலோடு பத்திரிகையை வாசித்தேன். ராமர் சேது பிரச்னை, இட ஒதுக்கீட்டிற்கு வந்துள்ள ஆபத்துக்கள், டெஹல்கா வெளிப்படுத்தியுள்ள குஜராத் கொடுமைகள், தஸ்லிமாவின் கருத்து சுதந்திரம், மலேசியத் தமிழர் பிரச்னை... என்று ஏதாவது முழங்கியிருப்பார் என்று பார்த்தால், அம்மையார் இங்கேயுள்ள இடதுசாரிகளாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாலும் கடுமையாக எதிர்க்கப்படும் அமெரிக்க _ இந்திய அணு ஒப்பந்தத்தை ஆதரித்து வீர உரை ஆற்றியுள்ளார். ஆதரித்து அவர் பேசியுள்ளவை அனைத்தும் அபத்தமானவை. எந்த அளவுக்குக் கேவலமானவை என்றால், மன்மோகன் சிங்கால் பாராட்டப்படும் அளவுக்குக் கேவலமானவை. மன்மோகன் பாராட்டினால் என்ன, புஷ் பாராட்டினால் என்ன, இரண்டும் ஒன்றுதானே. ‘‘காலனியம் முடிந்தும் மேலை ஆதிக்கம் குறித்தும் நமது கூட்டுப் பிரக்ஞையை ஆட்டிப் படைக்கும் எண்ணங்களை விரட்டி அடிக்க வேண்டும்’’ என்று கூறித்தான் எத்தனை தூரம் நவீனமானவர் எனவும் நிரூபித்துள்ளார். அது சரி, அணு ஒப்பந்த விஷயத்தில் இதுதான் தி.மு.க.வின் கொள்கையா?

தயாநிதிமாறனை இடம் பெயர்த்து அங்கே அமர்த்தப்பட்டவர் கனிமொழி. அந்த இடத்திற்கு அவர் தகுதியானவர் என்பதை நிருபித்துள்ளார் என்று வேண்டுமானால் கலைஞர் திருப்தி அடைந்து கொள்ளலாம். கார்ப்ரேட்டுகளின் ஏஜண்டாக மாறனுக்குப் பதிலாக இனி அவர் தி.மு.க.விற்குள் உலவுவார் என எதிர்பார்க்கலாம்.

இந்தச் சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு வாரிசைப் பற்றி இங்கே என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதற்காக அந்த வாரிசு என்னை மன்னிக்க வேண்டும். அவர்தான் பெருஞ்சித்திரனாரின் வாரிசு பொழிலன். நினைவிருக்கிறதா, தனது தமிழ் தேசியக் கொள்கைகட்காக வாழ்நாளெல்லாம் போராடி, சிறை பல ஏகி மாண்ட தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரை? தனது குடும்பத்தினர் அனைவரையும் போராளிகளாக்கி, சிறைகளை மாங்குயில்கள் கூவும் பூஞ்சோலைகளாக நினைக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தியவர். அவரது பெருமைக்குரிய வாரிசாக இன்று இயங்கி வரும் அவரது மகன் பொழிலன், பழைய வழக்கொன்றில் இன்று பத்தாண்டுகள் சிறைத்தண்டனைக்குள்ளாகியுள்ளார். உயர்நீதிமன்றம் இன்று இத்தண்டனையை உறுதி செய்துள்ளது. பிணையில் வர வேண்டுமானால் கூட இவர் உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும். அதற்குரிய நிதி வசதியும் கூட இல்லாத இயக்கம் அது. இப்படியும் ஒரு வாரிசு.றீ


தீரா நதி இதழில் அ.மர்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை


லேபிள்:-விஸ்ணுபுரம் தாண்டி வா

7 comments:

TBCD said...

என்னடா எலி அம்மனமாப் போகுதே என்றுப் பார்த்தால்...


///
லேபிள்:-விஸ்ணுபுரம் தாண்டி வா
///

கும்மாங்குத்துப் போங்க...

theevu said...

//என்னடா எலி அம்மனமாப் போகுதே என்றுப் பார்த்தால்...//

:):)

மக்கள் சட்டம் said...

பத்திரிகையாளனாக இருந்த காலத்தில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேட்டி எடுத்தாலும், அதை பிரசுரிக்க நிர்வாகம் மறுத்தது. "பெரிய அய்யா" உள்ளி்ட்ட காவலர்களுக்கு எதிராக செய்தி வெளியிட தமிழ் நாளேடுகள் இன்றுவரை முன் வந்ததில்லை.

ஆனால் அப்பகுதி மக்களின் பாதிப்புகளில் ஒரு சிறிய பகுதியை இலக்கிய தரத்துடன் ஆவணமாக்கி இருக்கிறார், வழக்கறிஞரும் - எழுத்தாளருமான பாலமுருகன்.

பல இலக்கியவாதிகள், வழக்கம் போல இந்த நாவலை கண்டு கொள்ளவே இல்லை என்பது சோகம்.

அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் இன்றுவரை தொடர்கிறது என்பதே உண்மை.

-சுந்தரராஜன்

theevu said...

//பல இலக்கியவாதிகள், வழக்கம் போல இந்த நாவலை கண்டு கொள்ளவே இல்லை என்பது சோகம். //

உண்மைதான்.

வரவுக்கு நன்றி சுந்தரராஜன்.

பல வலைப்பதிவர்கள் இந்த நாவலைப்பற்றி ஏற்கனவே சிலாகித்து எழுதியுள்ளார்கள்.

Anonymous said...

பொதுவாக .... நான் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் என்னுடைய நண்பனின் உந்துதலால் முதல் புத்தகமாக "வான்ங்கா" வின் வரலாறை படித்தேன். அதற்கு பின் சோளகர் தொட்டி.. இரண்டே நாட்களின் முடித்தேன்..இன்றும் என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை .. அது நானா என்று.. "மிகவும் சிந்திக்க வைத்த புத்தகம்..

Anonymous said...

வீரப்பன் வதம் பொத்தகம் வாசித்து இருக்கீங்களா?
உண்மையை புட்டு புட்டு வைக்கும் பொத்தகம். பாலமுருகன் எவ்வளவோ பொய் சொல்கிறார் என தெரியும்

Anonymous said...

இந்தக் கட்டுரையை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி. குறிப்பாக அந்த 'லேபிளுக்கும்'.